தோக்கியோ: ஜப்பானின் மத்தியப் பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, ஃபுஜி மலையின் முக்கிய, மலையேற்றத் தொடக்க இடம் ஒன்றில் புதன்கிழமை (செப்டம்பர் 9) நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் மூன்று வாகனங்கள் சிக்கியபோதிலும் யாருக்கும் காயங்களோ உயிரிழப்போ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
கனமழை காரணமாக ஃபுஜி சுபாரு பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கிடையே, மலையேற்றப் பாதைகளில் மலையேறிகள் இருவர் நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்கும் நிலச்சரிவுக்கும் தொடர்பில்லை எனக் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இதனிடையே, ஷிஸுவோகா வட்டாரத்தின் கவானேஹோன் நகரில் செப்டம்பர் 8ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அய்ச்சி, கிஃபு வட்டாரங்களில் பெய்த கனமழையால் 41 பேர் காயமடைந்தனர். அய்ச்சியின் தலைநகரான நகோயாவில் ஒரே மணிநேரத்தில் 104.5 மில்லிமீட்டர் மழை பதிவானது. இதனால் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் பலர் நிலையங்களில் தவித்தனர்.
இவ்வேளையில், ஜப்பானின் வடகிழக்கு முதல் மேற்குப் பகுதிகள் வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

