தோக்கியோ: ஜப்பானின் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியும் (எல்டிபி) சிறிய கட்சியான ஜப்பான் புத்தாக்கக் கட்சியும் (இஷின்) கூட்டணி சேரவுள்ளன.
இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து கூட்டணி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
எல்டிபி கட்சியின் தலைவர் சானே தகாய்ச்சியும் இஷின் கட்சித் தலைவர் ஹிரோஃபூமி யோஷிமுராவும் திங்கட்கிழமை (அக்டோபர் 20) கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாக ஜப்பானியச் செய்தி நிறுவனம் கியோடோ குறிப்பிட்டுள்ளது.
கூட்டணி உறுதியானால் ஜப்பான் அதன் முதல் பெண் பிரதமரை வரவேற்கும். 64 வயது தகாய்ச்சி அண்மையில் எல்டிபி கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தகாய்ச்சியை பிரதமராகத் தேர்ந்தெடுக்க ஜப்பான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) வாக்கெடுப்பு நடக்கிறது. அதில் இஷின் கட்சியின் உறுப்பினர்கள் தகாய்ச்சிக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி உடன்பாட்டில் இஷின் கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.
தகாய்ச்சி எல்டிபி கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு 26 ஆண்டுகள் கூட்டணியில் இருந்த கொமெய்டோ கட்சி கூட்டணியிலிருந்து விலகியது. இதையடுத்து இஷின் கட்சியுடன் எல்டிபி கட்சி கூட்டணி அமைக்கிறது.