தோக்கியோ: ஈராண்டுகளுக்குமுன் கஷிவாஸாக்கி - கரிவா அணுவாலை செயல்படுவதற்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், ஜப்பானிய அணுவாற்றல் ஒழுங்குமுறை ஆணையம் அத்தடையை விலக்கிக்கொண்டுள்ளது.
ஆயினும், நிகாட்டா மாநில அரசாங்கம், கஷிவாஸாக்கி நகரம், கரிவா சிற்றூர் ஆகிய உள்ளூர் அரசாங்கங்களின் அனுமதியை அவ்வாலை பெற வேண்டும்.
உலகின் ஆகப் பெரிய அந்த அணுவாலை தோக்கியோ மின்சார நிறுவனத்திற்குச் சொந்தமானது. அது 8,212 மெகாவாட் திறன் கொண்டது.
கடந்த 2012ஆம் ஆண்டு ஃபுக்குஷிமா அணுவாலையில் விபத்து ஏற்பட்டது. அதனையடுத்து, 2013ஆம் ஆண்டிலிருந்து கஷிவாஸாக்கி - கரிவா அணுவாலை செயல்படவில்லை.
இதனிடையே, பாதுகாப்பு விதிமீறலைக் காரணம் காட்டி, கடந்த 2021ஆம் ஆண்டு அவ்வாலை செயல்பட அணுவாற்றல் ஒழுங்குமுறை ஆணையம் தடைவிதித்தது.
வளங்கள் குறைந்த ஜப்பான், திரவ இயற்கை எரிவாயு போன்ற புதைபடிம எரிபொருள்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில், மேலும் பல அணுவாலைகளை இயக்க ஆர்வங்காட்டி வருகிறது.

