40 நொடிகளே ஆயினும் அதற்கு அந்நாட்டு வீண்வெளி அமைப்பு பெருமுயற்சி எடுத்துள்ளது
தோக்கியோ: ஜப்பானின் விண்வெளி அமைப்பு, அதன் தயாரிப்பில் உருவான மறுபயனீட்டு ஏவுகணை பாய்ச்சப்பட்டு பிறகு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதாக சனிக்கிழமை (ஜூலை 11) தெரிவித்தது.
அந்த மாதிரி வடிவச் சோதனை முயற்சி முதன்முறையாக அந்த அமைப்பால் மேற்கொள்ளப்பட்டது.
பெருஞ்செல்வந்தர் இலோன் மஸ்கின் ஆதரவோடு மிக அதிகமான பொருட்செலவில் தற்போது அனைத்துலக விண்வெளித் துறை இயங்குகிறது.
அதற்கு மாற்று ஏற்பாடாக குறைவான மதிப்பில் வாய்ப்புகளை ஏற்படுத்தி புத்துயிர் ஊட்டும் விதமாக ஜப்பானின் இந்தச் சோதனை அமைந்துள்ளது.
ஜப்பானின் விண்வெளி ஆய்வு அமைப்பின் (JAXA) சோதனைத் தளம் அகித்தா வட்டாரத்தில் நொஷிரோ என்ற இடத்தில் அமைந்துள்ளது. அங்கிருந்து கிளம்பிய அந்த மாதிரி ஏவுகணை ஏறத்தாழ 10 மீட்டர் உயரம்வரை மேலே சென்று பின்னர் அது தரையிறங்கியது.
நாற்பது நொடிகளே நீடித்த பயணம்
நாற்பது நொடிகளே நீடித்த அந்த பயணம், சிறிது நேரமே இருந்தாலும் அதற்கு அமைப்பு பெருமுயற்சி எடுத்துள்ளதாக சோதனையை தலைமை ஏற்று நடத்திய ஜப்பானிய விண்வெளி ஆய்வகத்தின் தக்காஷி இத்தோ செய்தியாளர்களிடம் கூறினார்.
எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி சோதனை நடத்தப்பட்டது ஆறுதல் அளிப்பதாகவும் அவர் பெருமிதம் அடைந்தார்.

