கடல்துறைத் தற்காப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான், மலேசியா ஒப்புதல்

கடல்துறைத் தற்காப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான், மலேசியா ஒப்புதல்

2 mins read
d98c9015-7d1d-4d22-a3f7-71f873f9a9ae
தோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி. - படம்: இபிஏ

தோக்கியோ: கடல்துறைத் தற்காப்பு மற்றும் எரிசக்தி விநியோகங்கள் ஆகியவற்றுக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சியும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

சீனாவின் கடல்சார் உரிமைகோரல்கள், போரினால் ஏற்பட்ட பொருளியல் சீர்குலைவுகள் போன்றவை குறித்த பொதுவான கவலைகளின் அடிப்படையில் அந்த உடன்பாடு அமைந்துள்ளது.

“தற்காப்பு அம்சங்களைப் பொறுத்த வரை கடல்துறைப் பாதுகாப்பின் அவசியம் மீதான பொதுவான புரிதலை நாங்கள் இருவரும் பகிர்ந்துகொண்டோம்,” என்று திருவாட்டி தக்காய்ச்சி புதன்கிழமை (ஜூன் 10) தோக்கியோவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சிகள் தொடரும் என்றும் ராணுவத் தளவாடங்களை ஜப்பான் வழங்குவதற்கான கூடுதல் வாய்ப்புகள் ஆராயப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு முக்குளிப்பு உதவிக் கப்பல்களையும் வானொலி அலைவரிசை வழியான தொடர்புக் கருவிகளையும் மலேசியாவுக்கு ஜப்பான் வழங்கியது.

அந்தச் செய்தியாளர் கூட்டத்தில் திரு அன்வார் பேசும்போது, பொருளியல் மற்றும் அரசதந்திர ஒத்துழைப்பு மூலம் ஒரே மாதிரியான கருத்துடைய நாடுகளின் ஆழமான உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஜப்பானின் தாராள, திறந்த இந்தோ-பசிபிக் தொடக்க முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இதுபோன்றதொரு முயற்சிக்கு மலேசியா தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றார் அவர்.

தற்காப்பில் முதலீடுகளை அதிகரிக்கும் ஜப்பானின் முடிவு தொடர்பான சீனாவின் அரசியல் அழுத்தத்தை ஜப்பான் எதிர்நோக்கியுள்ளது.

தனக்கும் தனது கூட்டாளிகளுக்கும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் திறனை வழங்குவதன் மூலம் மோதலைத் தடுக்க முதலீட்டு அதிகரிப்பு அவசியம் என்று அது கூறுகிறது.

பெய்ஜிங்கிற்கும் தோக்கியோவிற்கும் இடையிலான இந்தப் பதற்றம், அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் சில தொழில்நுட்பங்கள் போன்ற பொருள்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதைச் சீனா கட்டுப்படுத்தவும் வழிவகுத்துள்ளது.

மலேசியப் பிரதமர் மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ஜப்பான்மலேசியாஒத்துழைப்பு