தென்கிழக்காசிய நிலைத்தன்மைக்கு ஜப்பான் சிறப்பாகப் பங்களிக்கலாம்: மூத்த அமைச்சர் லீ

2 mins read
a4314e9b-9432-4d46-93ed-ba14d55e5dd9
சிங்கப்பூர் - ஜப்பான் உறவை எடுத்துக்கூறும் புத்தகத்தை பேராசிரியர் டோமி கோ (வலம்), சிங்கப்பூருக்கான ஜப்பானியத் தூதர் இ‌ஷிகாவா ஹிரொ‌ஷி (இடது) மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிடம் வழங்குகின்றனர். - படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலக நாடுகள் நிலையற்ற சூழலை எதிர்கொள்ளும் வேளையில் தென்கிழக்காசியாவிலும் ஆசிய பசிபிக் வட்டாரத்திலும் நிலைத்தன்மைக்கு ஜப்பான் கூடுதலாகப் பங்காற்ற முடியும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

தேசிய நூலக வாரியத்தில் ‘The Land of the Rising Sun and the Lion City: The Story of Japan and Singapore’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் புதன்கிழமை (ஏப்ரல் 2) அவர் பேசினார்.

தற்காப்பு உறவுகள், அணுவாயுதக் களைவு ஆகியவற்றை ஆதரிக்கும் நீண்டகால ஊகங்கள் பற்றிய அடிப்படைக் கேள்விகள் எழுப்பப்படுவதாகச் சொன்ன அவர், இத்தகைய சூழலில் தென்கிழக்காசிய, ஆசிய பசிபிக் வட்டாரங்களின் நலனுக்கு ஜப்பான் பங்களிக்க முடியும் என்றார்.

எனவேதான் 2022ஆம் ஆண்டு வட்டார அளவிலான பாதுகாப்பு விவகாரங்களில் கூடுதலாகப் பங்காற்றும்படி ஜப்பானைத் தாம் ஊக்குவித்ததாகத் திரு லீ சொன்னார்.

மீண்டும் 2023ஆம் ஆண்டு ஆசியான் - ஜப்பான் உச்சநிலைச் சந்திப்பிலும் ஜப்பானைக் கூடுதலாக பங்களிக்கும்படித் தாம் கேட்டுக்கொண்டதை அவர் சுட்டினார்.

நட்பை வளர்த்துக்கொள்வதற்கும் வட்டார அமைதிக்கும் செழிப்புக்கும் கூட்டாகப் பங்களிக்கவும் ஜப்பானுக்கும் ஆசிய நாடுகளுக்கும் அதற்கேற்ற அரசியல் தலைமைத்துவமும் சாமர்த்தியமும் இருக்கவேண்டும் என்று திரு லீ அறிவுறுத்தினார்.

கடந்த ஆண்டுகளில் வட்டாரப் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் அதிக அளவில் பங்காற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2014ஆம் ஆண்டு ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் ஜப்பான் பங்களிக்கத் தொடங்கியது. 2023ஆம் ஆண்டு கடல்துறைப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் ஆசியானுடனான ஒத்துழைப்பை அது வலுப்படுத்திக்கொண்டது.

சிங்கப்பூரும் ஜப்பானும் பல விவகாரங்களில் ஒரே கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதாகச் சொன்ன மூத்த அமைச்சர் லீ, பலதரப்பு வர்த்தகக் கட்டமைப்பு, விதிமுறைகளின் அடிப்படையிலான அனைத்துலக, வட்டார ஒழுங்கு ஆகியவற்றைக் கட்டிக்காப்பது ஆகியவற்றைச் சுட்டினார்.

சிங்கப்பூர் இந்த ஒருங்கிணந்த முயற்சியில் ஜப்பானின் நம்பிக்கைக்குரிய பங்காளியாய் இருக்கிறது. இனி எப்போதும் அவ்வாறே இருக்கும் என்று திரு லீ சொன்னார்.

குறிப்புச் சொற்கள்