தோக்கியோ: ஜப்பானின் புதிய பிரதமராக முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா, 67, தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.
அக்டோபர் 1ஆம் தேதி அவர் ஜப்பானின் 102வது பிரதமராகப் பதவி ஏற்பார். தற்போதைய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அதே நாளில் அதிகாரபூர்வமாகப் பதவி துறப்பார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மிதவாத ஜனநாயகக் (எல்டிபி) கட்சிக்குப் பெரும்பான்மை உள்ளது. அந்தக் கட்சியின் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்படுபவரே பிரதமர் நாற்காலியில் அமர்வார்.
அதனால், அந்தப் பதவிக்கு இம்முறை வரலாறு காணாத போட்டி நிலவியது. தலைமைத்துவத் தேர்வுக்கான உட்கட்சித் தேர்தலில் ஒன்பது பேர் போட்டியிட்டனர். ஜப்பானிய அரசியல் வரலாற்றில் தலைமைப் பதவிக்கு இத்தனை பேர் போட்டியில் குதித்தது இதுவே முதல்முறை.
அந்த ஒன்பது பேரில் மூவர் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வாயினர்.
முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரும் அரசியல் வாரிசுமான ஷின்ஜிரோ கொய்சுமி, 43, பொருளியல் பாதுகாப்பு அமைச்சர் சானே தகாய்ச்சி, 63, முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா, 67, ஆகியோர் அந்த மூவர்.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) நடத்தப்பட்ட முதற்கட்ட வாக்கெடுப்பில் கடும் போட்டி நிலவியதால் யாரும் தேர்வாகவில்லை.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் சுற்று வாக்கெடுப்பை எல்டிபி நடத்தியது.
தொடர்புடைய செய்திகள்
அந்த வாக்கெடுப்பில், தற்போதைய பொருளியல் பாதுகாப்பு அமைச்சரான திருவாட்டி சானே தகாய்ச்சியை திரு இஷிபா பின்னுக்குத் தள்ளி வெற்றிபெற்றார்.
திரு இஷிபாவுக்கு ஆதரவாக 215 வாக்குகளும் திருவாட்டி தகாய்ச்சிக்கு ஆதரவாக 194 வாக்குகளும் கிடைத்தன.
ஜப்பானியப் பிரதமர் பதவிக்கு ஏற்கெனவே நான்கு முறை முயன்ற திரு இஷிபா, தமது ஐந்தாவது முயற்சியில் வெற்றிபெற்று உள்ளார். அதன்மூலம், அவரது பிரதமர் கனவு நிறைவேறி உள்ளது.
தமது அரசாங்கத்தின் மீது தொடர்ந்து மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்ததால், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக திரு கிஷிடா கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
அதனால், உடனடியாக புதியவரைத் தேர்ந்து எடுக்க வேண்டிய அவசியம் ஆளும் கட்சிக்கு ஏற்பட்டது.

