செவ்வாய்க்கோளை வலம் வரத் திட்டமிடும் ஜப்பான்

செவ்வாய்க்கோளை வலம் வரத் திட்டமிடும் ஜப்பான்

1 of 4
படம்: ஏஎஃப்பி
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: நியூயார்க் டைம்ஸ்

18 Oct 2026 - 1:22 pm

1 mins read

தோக்கியோ: செவ்வாய்க்கோளின் நிலவுப் பகுதிகளிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து வரும் நோக்கம் கொண்ட விண்வெளித் திட்டத்திற்கு ஜப்பான் தயாராகிவருகிறது.

அதன் வழியாகச் சூரிய மண்டலம், பூமியின் உயிரினங்கள், அவற்றின் தொடக்கத்தின் ரகசியங்கள் முதலியவை பற்றிக் கண்டறிய அந்நாடு முற்படுகிறது. செவ்வாய்க்கோளைச் சுற்றிப் பயணம் மேற்கொள்ளும் இந்த முயற்சி உலகில் முதன்முறையாக ஜப்பானிய விஞ்ஞானிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனிதர்கள் இன்றிச் சொந்தமாக இயங்கும் இத்திட்டத்திற்கு ‘மார்ஷியன் மூன்ஸ் எக்ஸ்புளோரேஷன்’ (எம்எம்எக்ஸ்) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திட்டத்தில் அமெரிக்க, ஐரோப்பிய விண்வெளி அமைப்புகளும் இணைந்துள்ளன. அந்நாடுகளின் பல பல்கலைக்கழகங்களும் தொழில்நுட்ப நிறுவனங்களும் திட்டத்தில் பங்கெடுக்கின்றன.

பயணத்துக்குப் பயன்படும் ‘எச்3’ ரக ‘ராக்கெட்’ விண்கலம், தானேகாஷிமா விண்வெளி நிலையத்தில் இருந்து அக்டோபர் 20ஆம் தேதி உள்ளூர் நேரப்படி அதிகாலை மணி 4.41க்கு விண்ணோக்கிப் பாய்ச்சப்படும். அதனை ஜப்பான் விண்வெளி ஆய்வு அமைப்பு (ஜெஏஎக்ஸ்ஏ) தெரிவித்தது.

விண்கலம், அன்றிலிருந்து ஓராண்டு பயணம் செய்து செவ்வாய்க்கோள் அருகில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள ‘போபோஸ்’ நிலவினை மூன்று ஆண்டுகள் சுற்றிய பிறகு அதன்மீது விண்கலம் தரையிறக்கப்படும். அங்கிருந்து 10 கிராம் எடையுள்ள மாதிரிப் பாகங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் பூமியை விண்கலம் வந்தடைவது திட்டம்.

குறிப்புச் சொற்கள்