தோக்கியோ: ஜப்பானின் நிகாட்டா மாநிலச் சட்டமன்றம், உலகின் ஆகப் பெரிய அணுவாலையை மீண்டும் திறக்கும் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது. 2011ஆம் ஆண்டு ஃபுக்குஷிமா பேரிடர் நேர்ந்த பிறகு, ஜப்பான் முதன்முறையாக அந்த முடிவை எடுத்திருக்கிறது.
கஷிவாஸாக்கி-கரிவா ஆலையை மீண்டும் திறப்பதற்கு நிகாட்டா வட்டார ஆளுநர் ஹிடெயோ ஹனாஸுமி நவம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தார்.
2011ல் ஃபுக்குஷிமா அணுவாலையின் மூன்று அணுவுலைகள் நிலநடுக்கத்தாலும் சுனாமியிலும் உருகின. அதனைத் தொடர்ந்து அணுசக்தி உற்பத்தியைத் தோக்கியோ நிறுத்திவைத்திருந்தது.
ஆனால் இயற்கை வளத்தைக் குறைவாகக் கொண்ட நாடு, இப்போது அணுசக்தித் துறைக்குப் புத்துயிரூட்ட விரும்புகிறது. படிம எரிபொருள்களை அதிகம் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் கரியமில வாயு வெளியேற்றத்தை 2050ஆம் ஆண்டிற்குள் அறவே அகற்றவும் முனைகிறது தோக்கியோ. அத்துடன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான கூடுதல் எரிசக்தியை உற்பத்தி செய்யவும் ஜப்பான் முற்படுகிறது.
நிகாட்டா வட்டாரத்தில்தான் கஷிவாஸாக்கி-கரிவா அணுவாலை அமைந்துள்ளது. ஆளுநரின் முடிவை மாநிலச் சட்டமன்றம் திங்கட்கிழமை (டிசம்பர் 22) அங்கீகரித்து வாக்களித்தது. 53 உறுப்பினர்களைக் கொண்ட மன்றத்தில் பெரும்பாலானோர் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அணுவாலையை மீண்டும் திறப்பதற்குத் தோக்கியோ எலெக்ட்ரிக் பவர் (டெப்கோ) நிறுவனம், அடுத்து ஜப்பானின் அணுசக்திக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும்.
இவ்வாண்டு இறுதிக்குள் அதற்கான விண்ணப்பத்தை டெப்கோ சமர்ப்பிக்கும் என்று ஜப்பானிய ஊடகங்கள் கூறுகின்றன.
கஷிவாஸாக்கி-கரிவா அணுவாலையில் ஏழு அணுவுலைகள் உள்ளன. அவற்றில் ஒன்றை அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 20ஆம் தேதி திறக்க டெப்கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதுகுறித்துத் திரு ஹனாஸுமி, ஜப்பானின் தொழில்வள அமைச்சர் ரியோசெய் அக்காஸாவாவுடன் செவ்வாய்க்கிழமை பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர்த் தொலைக்காட்சி நிறுவனமான பிஎஸ்என் அதனைத் தெரிவித்தது.


