அமெரிக்க வரிகளை நீக்க முயலும் ஜப்பான் பிரதமர் இ‌ஷிபா

2 mins read
87e34ec9-1c86-4370-a4d8-e61e51c49c13
ஜப்பானிய பிரதமர் ‌ஷிகெரு இ‌ஷிபா, வரிகளை முழுமையாக அகற்றும் இலக்குடன் அமெரிக்காவிடம் பேசவிருக்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ - ஜப்பானியப் பிரதமர் ‌ஷிகெரு இ‌ஷிபா, அனைத்து வரிகளையும் ரத்து செய்ய வைக்கும் இலக்குடன் அமெரிக்காவுடனான வர்த்தகச் சமரசப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதாக ஞாயிற்றுக்கிழமை (மே 11) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஃபுஜி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், கலந்துரையாடல்கள் படிப்படியாகக் கைக்கூடி வந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் தோக்கியோவுக்கு உள்ள உறவு ஆச்சரியமளிக்கும் வகையில் சீராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மே 8ஆம் தேதி, அமெரிக்கா லண்டனுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 10 விழுக்காட்டு வரியை அடிப்படையாக வைத்துக்கொண்டு பிரிட்டி‌ஷ் கார் ஏற்றுமதிகள் மீதான தடைசெய்யப்பட்ட வரிகள் குறைக்கப்படுகிறது. 

இது வர்த்தக உடன்பாடுகளுக்கான ஒரு மாதிரி என்ற திரு இ‌ஷிபா, “ஆனாலும் நாம் வரியை முழுமையாக நீக்க முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வர்த்தக உடன்பாடுகள் எட்டப்பட்டாலும் 10 விழுக்காட்டு அடிப்படை வரி நடப்பில் இருக்கும் என்று மே 9ஆம் தேதி தெரிவித்தார். குறிப்பிடத்தக்க வர்த்தகச் சலுகைகளை முன்வைக்கும் நாடுகள் வரியிலிருந்து விலக்களிக்கப்படக்கூடும் என்றும் அவர் சொன்னார்.

தற்போது, பொருளியல் சார்ந்த முக்கிய தானியக்கப் பாகங்களுக்கான ஜப்பானிய இறக்குமதி மீது அமெரிக்கா 25 விழுக்காட்டு வரியை விதித்துள்ளது. இதர ஜப்பானியப் பொருள்களுக்கு 24 விழுக்காட்டுப் பதில் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் பொருளியலுக்கு ஆதரவளிப்பது பற்றி பேசிய திரு இ‌ஷிபா, பயனீட்டாளர் வரியைக் குறைப்பது குறித்து கவனமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றார்.

“நாம் திடீரென பயனீட்டாளர் வரியைக் குறைத்தால் நாட்டின் நிதி என்னாவது,” என்ற அவர், “உண்மையில் தேவையுள்ளோருக்கு உதவ வேறு வழிகள் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும்” என்றார்.

குறிப்புச் சொற்கள்