சூஸு, ஜப்பான்: ஜப்பானின் கிழக்குக் கடலோரப் பகுதியை பெரிய அளவிலான நிலநடுக்கம் உலுக்கி ஒரு மாதமான நிலையில், உயிர் பிழைத்தவர்கள் கடுங்குளிருக்கும், தூய்மையற்ற நிலைகளுக்கும் எதிராகப் போராடி வருகின்றனர்.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் இல்லை. நோட்டோ தீபகற்பத்தில் உள்ள சில பகுதிகளில் மேலும் இரண்டு மாதங்களுக்குத் தண்ணீர் இருக்காது என்று இஷிகாவா அரசாங்கம் கூறியிருக்கிறது.
அதனால், கூட்டம் அதிகமுள்ள மீட்பு நிலையங்களில் வசிப்போருக்குக் கூடுதல் பாதிப்பு ஏற்படலாம். அந்த நிலையங்களில் சுவாசத் தொற்றுநோய்களும் இரைப்பைக் குடலழற்சிச் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இங்கு தண்ணீர் இல்லை. அதனால் எங்களால் எங்களது துணிகளைத் துவைக்கமுடியவில்லை, குளிக்க முடியவில்லை,” என்று சூஸு நகரில் தங்கியிருக்கும் 68 வயது யோஷியோ பின்சாக்கி கூறினார்.
அந்த 7.6 ரிக்டர் அளவிலான நிலடுக்கத்தில் 230க்கும் மேற்பட்டோர் மாண்டனர். எட்டு ஆண்டுகளில் ஜப்பானை உலுக்கிய ஆக மோசமான நிலநடுக்கம் அது.
அந்த நிலநடுக்கத்தில் 44,000 வீடுகள் சேதமுற்றன. 40,000 வீடுகளில் தண்ணீர் இல்லை. 13,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் மீட்பு நிலையங்களில் தங்கியுள்ளதாக இஷிகாவா அரசாங்கம் கூறியது.
இஷிகாவா பகுதியில், அதிகாரிகள் மீட்பு நிலையங்களில் உள்ளவர்களுக்குச் சளிக்காய்ச்சல் தடுப்பூசியைப் போட உள்ளனர்.
சூஸு பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் ஜனவரி 30ஆம் தேதி பிற்பகலில் குழந்தைகள் ஊஞ்சல்களில் விளையாடிக்கொண்டிருந்தனர். உள்ளூர்வாசிகள் பொதுத் தண்ணீர்த் தொட்டி ஒன்றைச் சுற்றி கூடியிருந்ததைக் காணமுடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
மாலை நேரமானதும், குடியிருப்பாளர்கள் குளிப்பதற்காக ராணுவ வீரர்கள் தற்காலிகமாக அமைத்துவைத்திருந்த பொதுக் குளியலறையைச் சுற்றி நின்றதையும் காணமுடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

