தோக்கியோ: ஜப்பானில் நீடித்த நிலைத்தன்மை கொண்ட விமானத்துறை எரிபொருளை சேகரிக்கும் முயற்சிகள் தேசிய அளவில் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
எடுத்துக்காட்டாக, இல்லத்தரசிகள் சிலர் சமைத்த பிறகு மிஞ்சும் சமையல் எண்ணெய்யை சேகரித்து வைக்கின்றனர். அதன் மூலம் தனிநபர் ஒருவரால் ஆண்டுக்கு 40 லிட்டர் எண்ணெய்யைகூட சேகரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு சேகரிக்கப்படும் எண்ணெய் பேரங்காடிகளில் ஒன்றுசேர்க்கப்படுகிறது. ‘ஃபிரை டு ஃபிளை’ (Fry to Fly) எனப்படும் இந்தத் திட்டத்தில் கிட்டத்தட்ட 300 பேரங்காடிகள் பங்கேற்கின்றன.
ஈரான் போர் காரணமாக இயற்கை வளங்கள் அதிகம் இல்லாத ஜப்பானில் எரிசக்தி விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதோடு, அந்நாட்டில் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ‘ஃபிரை டு ஃபிளை’ நீடித்த நிலைத்தன்மை அம்சம்கொண்ட எரிபொருளைச் சேகரிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
ஜப்பானின் இலக்கு
2030ஆம் ஆண்டுக்குள், தான் பயன்படுத்தும் விமானத்துறை எரிபொருளில் 10ல் ஒரு பங்கை நீடித்த நிலைத்தன்மை அம்சங்களின் வாயிலாகப் பெறும் இலக்கை ஜப்பான் கொண்டுள்ளது.
2030ல் தனக்கு சுமார் 1.7 கிலோலிட்டர் அளவு எரிபொருள் தேவைப்படும் என்று உலகின் நான்காவது ஆகப் பெரிய பொருளியலான ஜப்பான் கணித்துள்ளது. அதில் முடிந்தவரை அதிக அளவை உள்நாட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் வாயிலாகப் பெற அது திட்டம் கொண்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், மலிவு விலையில் நீடித்த நிலைத்தன்மை அம்சம்கொண்ட விமானத்துறை எரிபொருளைப் பெறுவதற்கு வகைசெய்யும் ஒன்றாகும்.
தொடர்புடைய செய்திகள்
சவால்கள்
எனினும், தற்போது ஜப்பானில் பயன்படுத்தப்படும் விமானத்துறை எரிபொருளில் 0.3 விழுக்காடு மட்டும்தான் உள்ளூரிலிருந்து சேகரிக்கப்படுகிறது. தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக சவால்களை எதிர்நோக்குவதாக அந்நாட்டின் ஏஎன்ஏ, ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உலக அளவில் விமான நிறுவனங்கள் வெளியிட்ட, நீடித்த நிலைத்தன்மையுடைய எரிபொருளுக்கான திட்டங்களில் ஐந்தில் ஒன்று மட்டுமே பலனடைந்திருப்பதாக சென்ற ஆண்டு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், ஜப்பானில் தனிநபர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட தரப்புகள் நீடித்த நிலைத்தன்மை அம்சம்கொண்ட விமானத்துறை எரிபொருள் தொடர்பான முயற்சிகளுக்குக் கைகொடுப்பதில் தீவிரம் காட்டிவருகின்றன.

