தோக்கியோ: அமெரிக்கா அதரவுடன் ஈரான்மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலால், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதைக் கருத்தில் கொண்டு, மார்ச் 26ஆம் தேதி முதல் தனது கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யை ஜப்பான் வெளியிடத் தொடங்கும் என அந்நாட்டுப் பிரதமர் சானே தக்காய்ச்சி செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) தெரிவித்தார்.
மத்திய கிழக்கு பதற்றங்களால் பொருளியலுக்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டம் ஒன்றை ஜப்பானிய அரசாங்கம் கூட்டியது. அதில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தனியார் துறையின் கையிருப்பில் இருந்த எண்ணெய்யை வெளியிடும் பணிகளைக் கடந்த வாரமே அந்நாடு தொடங்கிய நிலையில், தற்போது அரசு கையிருப்பிலிருந்தும் எண்ணெய்யை வெளியிட முன்வந்துள்ளது.
ஜப்பானில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எண்ணெய் உற்பத்தியும் மத்திய கிழக்கு நாடுகளின் கூட்டு எரிபொருள் கையிருப்பும் மார்ச் இறுதிக்குள் பயன்படுத்தப்படும் எனத் திருவாட்டி தக்காய்ச்சி கூறினார். மேலும், மத்திய கிழக்கின் அமைதியும் நிலைத்தன்மையும் ஜப்பானுக்கு மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், அதற்குத் தேவையான அனைத்து அரசதந்திர முயற்சிகளையும் ஜப்பான் மேற்கொள்ளும் என்றார்.
மார்ச் 19ஆம் தேதி, வாஷிங்டனில் அதிபர் டிரம்ப்புடன் நடந்த சந்திப்பின்போது, உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

