கடலுணவுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க உலக வர்த்தக அமைப்பின் உதவியை நாடும் ஜப்பான்

2 mins read
e25edb19-df26-4dbe-a83f-07707674f5b5
கடலுணவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளைத் திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை ஜப்பானிய அரசாங்கம் மேற்கொள்ளும் என ஜப்பானின் வெளியுறவுத் துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி செய்தியாளர்களிடம் கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பான், ஃபுக்குஷிமா அணுஆலையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கடலுக்குள் கடந்த வியாழக்கிழமை திறந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து ஜப்பானியக் கடலுணவுக்குச் சீன அரசாங்கம் இடைக்காலத் தடை விதித்தது.

அந்தத் தடையை நீக்க வலியுறுத்தி சீனாமீது உலக வர்த்தக அமைப்பிடம் புகார் அளிக்கப்போவதாக ஜப்பான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

கடலுணவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளைத் திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை ஜப்பானிய அரசாங்கம் மேற்கொள்ளும் என ஜப்பானின் வெளியுறவுத் துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜப்பானின் தேசிய கொள்கை அமைப்புக்கு இதுவரை 225 தொல்லை தரும் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன என்று ஜிஜி செய்தி தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அழைப்புகளைத் தடுக்கத் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளதாக ஜப்பான் கூறியது.

“அதிக எண்ணிக்கையில் தொல்லைதரும் தொலைபேசி அழைப்புகள் சீனாவிலிருந்தே வருவதாக நம்பப்படுகிறது. இது மிகவும் வருத்தத்திற்கு உரியது. இதுகுறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம்,” என்று ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்நிலைப் பேச்சாளர் ஹிரோகாஸு மட்சுனோ செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

“சில அழைப்புகள் மருத்துவமனைகளுக்கும் விடுக்கப்படுகின்றன. இதனால் அவசர உதவித் தேவைப்படுவோர் பாதிக்கப்படுகின்றனர். தயவுசெய்து உடனடியாக அழைப்புகளை நிறுத்துங்கள்,” என மேலும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, அணுஆலையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கடலுக்குள் திறந்துவிட்டபிறகு சீனாவில் வாழும் ஜப்பானியர்களை அவர்கள் துன்புறுத்துகின்றனர் என்றும் பெய்ஜிங்கில் உள்ள ஜப்பான் நாட்டின் தூதரகத்தின் மீது செங்கல் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் சொல்லப்பட்டது.

அங்கு பணிபுரியும் பணியாளர்கள் இந்தச் சம்பவங்களால் அச்சமடைந்துள்ளனர் எனவும் இவை அனைத்தும் எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது எனவும் ஜப்பானிய அரசாங்கம் கூறியது.

ஜப்பான் தூதரகத்தின் நுழைவாயிலில் ஆர்பாட்டம் நடத்துவதற்காகத் திரண்ட சிலரை சீனக் காவல்துறை கைது செய்தது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர சீனா தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா சீனாவிடம் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்