தோக்கியோ: ஜப்பானின் பழைய பள்ளிக் கட்டடங்களில் மாணவர்கள் வெப்பத்தால் வாடி வதங்கி, படிக்க மிகவும் அவதிப்படுகின்றனர். அங்கு வெப்பத் தடுப்பு அமைப்பு சரியாக இல்லாததால் குளிர்சாதன வசதி சரியாக இல்லை. இதனால் மாணவர்கள் சோர்வடைகின்றனர். ஆசிரியர்கள் எரிச்சலடைகின்றனர்.
இது அதிக மின்கட்டணம், அதிக கார்பன் உமிழ்வு ஆகியவற்றையும் குறிக்கிறது.
“மாணவர்கள் பெரும்பாலும் வெளியில் விளையாடத் தடை விதிக்கப்படுகிறது. காலை முதல் பிற்பகல் வரை ஆசிரியர்கள் மாணவர்களைத் தண்ணீர் குடிக்கச் சொல்லி விரட்டுகிறார்கள், ” என்றார் தோக்கியோ தொடக்கப் பள்ளி ஆசிரியர் யூரிகோ டகாஹஷி.
ஜப்பானில் 126 ஆண்டுகளுக்கு முன் வெப்பநிலைப் பதிவு தொடங்கியதிலிருந்து ஜூலை மாதத்தில் ஆக அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. ஏப்ரல் முதல் வெப்பத்தால் 59 பேர் இறந்துள்ளனர் என்று அந்நாட்டின் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.
2023 செப்டம்பர், ஆக அதிக வெப்பமான செப்டம்பராகப் பதிவானது.
அண்மைய நாள்களில் ஜப்பானில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. கடந்த வாரம் 12,666 வெப்ப அலை தாக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக என்எச்கே ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்தது.
“அண்மைய ஆண்டுகளில், பள்ளி விடுமுறை தொடங்குவதற்கு முன்னரே (ஜூலை நடுப்பகுதியில்) கோடை தொடங்கி விடுகிறது,” என்று ‘கிரீன்பீஸ்’ பருவநிலை, எரிசக்தி இயக்கத்தின் காஜூ சுசுகி கூறினார்.
“ஜப்பானில் உள்ள பல பள்ளிக் கட்டடங்கள் 60 அல்லது 70 ஆண்டுகள் பழமையானவை. அவற்றுக்குப் போதுமான வெப்பத் தடுப்பு வசதி இல்லை. அதனாலேயே அங்குள்ள குளிர்சாதனங்கள் சரியாக வேலை செய்யவில்லை,” என்று அவர் சொன்னார்.
தோக்கியோவின் கட்சுஷிகா பகுதியில் 73 தொடக்க, உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதுவரை இரு பள்ளிகள் சில வகுப்பறைகளைப் புதுப்பித்துள்ளன.
அந்த வகுப்பறைகளில் உள்ள குளிர்சாதனம் தற்போது 45 நிமிடங்களில் 32 டிகிரி செல்சியசிலிருந்து 27 டிகிரி செல்சியசாக வெப்பநிலையைக் குறைக்கிறது. முந்தைய 100 நிமிடங்களுடன் ஒப்பிடும்போது இது வேகமாகச் செயல்படுகிறது. மேலும் பாதிக்கும் குறைவான ஆற்றலையே பயன்படுத்துகிறது. அத்துடன் சன்னல்களும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன.
60 விழுக்காட்டுக்கும் அதிக மாணவர்கள் தற்போது பாடத்தில் கவனம் செலுத்த முடிவதாகக் கூறினர்.
