பொதுத் தேர்தலுக்கு தயாராகும் ஜப்பான்

2 mins read
94143ef2-5cdc-4c74-82cd-c906cf2a4c25
ஜப்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா அந்நாட்டில் அக்டோபர் மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் 27ஆம் தேதி ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட இஷிபா, 67, அக்டோபர் 1ஆம் தேதி ஜப்பான் பிரதமராகப் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் தற்காப்பு அமைச்சரான இஷிபா, ஜப்பான் நாடாளுமன்றத்தை அக்டோபர் 9ஆம் தேதி கலைக்கத் திட்டமிட்டுள்ளதாக முன்னணி ஜப்பானிய ஊடகங்கள் திங்கட்கிழமை தகவல் வெளியிட்டுள்ளன.

செப்டம்பர் 27ஆம் தேதியன்றே இஷிபா, பொதுத் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசித்ததாகவும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்ட வேண்டும் என்று கூறியதாகவும் அந்தத் தகவல்களில் குறிப்பிட்டுள்ளன.

ஜப்பானை ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சி பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. தற்போது பிரதமராக உள்ள ஃபுமியோ கிஷிடா, கடந்த மாதம் தாம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார்.

கிஷிடா அரசாங்கத்தின் மீது மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சுமத்தப்பட்டு வந்ததன. மேலும் அதிகரித்து வரும் விலைவாசி உள்ளிட்டவை கிஷிடாமீது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்களிடம் அவரின் செல்வாக்கும் குறைந்தது. அதைத்தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து விலகும் முடிவை கிஷிடா எடுத்தார்.

இந்நிலையில் இஷிபா திங்கட்கிழமையன்று அவரது அமைச்சரவையில் உள்ள முக்கிய பொறுப்புகளை யாருக்கு வழங்குவது என்பது குறித்து கட்சியிடம் பேசுவார் என்று கூறப்படுகிறது.

மேலும் மிதவாத ஜனநாயகக் கட்சியில் உள்ள பிளவுகளையும் வேறுபாடுகளையும் அகற்ற இஷிபா நடவடிக்கை எடுப்பார் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

உட்கட்சித் தேர்தலில் தமக்கு எதிராகப் போட்டியிட்டவர்களுக்கு இஷிபா, நிதியமைச்சு, அமைச்சரவை தலைவர் உள்ளிட்ட பதவிகளை வழங்குவார் என்று கூறப்படுகிறது.

இஷிபாவுக்கு மிகவும் நெருக்கமான திரு டெக்கே‌ஷிக்கு வெளியுறவு அமைச்சு வழங்கப்படலாம். மேலும் திரு ஜென் நகடானிக்கு தற்காப்பு அமைச்சு வழங்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்