யாஷியோ, ஜப்பான்: ஜப்பானின் யாஷியோ நகரில் ஏற்பட்ட ஆழ்குழி கிட்டத்தட்ட ஒலிம்பிக் நீச்சல்குளம் அளவுக்கு நீண்டுவிட்டது.
இருப்பினும், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) அந்தக் குழிக்குள் தமது லாரியுடன் விழுந்த 74 வயது ஓட்டுநர் இன்னும் மீட்கப்படவில்லை.
குழிக்குள் அவரைத் தேடும் பணி நீடித்து வருகிறது. தற்போது அந்தக் குழி 40 மீட்டருக்கு விரிவடைந்து உள்ளது. அதாவது, ஒலிம்பிக் நீச்சல்குள அளவுக்கு அது பெரிதாகி உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
துருப்பிடித்த கழிவுநீர்க் குழாய்கள் சேதமடைந்ததால் குழி பெரிதாகி இருக்கலாம் என்று யாஷியோ நகர அதிகாரிகள் கருதுகின்றனர்.
மீட்புப் பணி இரவுபகலாக நீடித்து வரும் வேளையில், அந்த இடம் தற்போது ஆபத்து மிகுந்த நிலையில் இருப்பதாக உள்ளூர் தீயணைப்பு நிலைய தலைமை அதிகாரி டேட்சுஜி சாட்டோ வியாழக்கிழமை (ஜனவரி 30) செய்தியாளர்களிடம் கூறினார்.
“குழிக்குள் இறங்க, பாதுகாப்பான இடத்தில் இருந்து சரிவுப் பாதை ஒன்றை கட்டலாம் என முடிவெடுத்து உள்ளோம். அதன் பிறகுதான் கனரக சாதனங்களை குழிக்குள் செலுத்தி ஓட்டுநரைத் தேட இயலும்,” என்று அவர் தெரிவித்தார்.
நிலத்தடி நீர் தொடர்ந்து கசிந்துகொண்டு இருப்பதால் அந்தப் பகுதி தொடர்ந்து பள்ளமாகி வருகிறது என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, நான்கு நாள்களாகியும் குழிக்குள் விழுந்த ஓட்டுநர் உயிருடன் இருக்கிறாரா என்ற தகவல் இல்லை.