விமானத்திற்குள் மின்னூட்டக் கருவிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் ஜப்பான் தடை

விமானத்திற்குள் மின்னூட்டக் கருவிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் ஜப்பான் தடை

1 mins read
eb504fb6-15d8-4671-9891-a9de0318f2b0
விமானங்களில் உள்ள மின்-இணைப்புகளில் மின்னூட்டக் கருவிகளைப் பொருத்தி மின்னூட்டுவதற்கும் தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டது.  - படம்: பிக்ஸாபே

தோக்கியோ: ஜப்பானியப் போக்குவரத்து அமைச்சு, வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து விமானங்களில் மின்னூட்டக் கருவிகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.

கைத்தொலைபேசி மின்கலன்கள் விமானங்களில் தீப்பற்றிய சம்பவங்களைத் தொடர்ந்து ஜப்பானின் அறிவிப்பு வந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரமொன்று புதன்கிழமை (பிப்ரவரி 18) தெரிவித்தது.

திறன்பேசிகளை மின்னூட்டுவதற்கு மட்டுமல்லாமல் விமானங்களில் உள்ள மின்-இணைப்புகளில் அவற்றைப் பொருத்தி மின்னூட்டுவதற்கும் தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டது.

விமானத்திற்குள் இருக்கைக்கு மேல் உள்ள பயணப் பெட்டிகளுக்கான பகுதியில் மின்னூட்டக் கருவிகளை வைக்க வேண்டாம் என்றும் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் நில, உள்கட்டமைப்பு, போக்குவரத்து, சுற்றுப்பயண அமைச்சு பயணிகளைக் கேட்டுக்கொண்டது.

மின்னூட்டக் கருவிகளில் பொதுவாக லித்தியம் அயனியைக் கொண்ட மின்கலன்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை உரசும்போதோ வலுவிழக்கும்போதோ தீப்பிடித்துக்கொள்ளும் ஆபத்திருப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.

பயணப் பதிவுக்குப் பின்னர், விமானத்திற்குள் அனுப்பப்படும் பயணப் பெட்டிகளில் கைத்தொலைபேசி மின்கலன்கள் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை. கையில் எடுத்துச்செல்லும் பை அல்லது பெட்டியில் எத்தனை மின்கலன்களைக் கொண்டுசெல்லலாம் என்பதற்கும் எந்த அளவு ஆற்றல் கொண்டவையாக அவை இருக்கலாம் என்பதற்கும் வரம்பு உண்டு.

குறிப்புச் சொற்கள்