குடிநுழைவு நடைமுறையை வேகப்படுத்தும் ஜப்பான்

1 mins read
8dfd8398-7b86-4dac-966c-a55646042233
ஜப்பானின் யமனாஷி மாநிலத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு முன்னால் புகைப்படத்துக்கு காட்சியளிக்கும் சுற்றுப்பயணிகள். பின்னணியில் ஃபுஜி மலை உள்ளது. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் கூடிய விரைவில் குடிநுழைவு நடைமுறைகளை எளிதில் நிறைவேற்றலாம்.

2025 ஜனவரி முதல், குடிநுழைவுக்கு முந்திய புதிய முறையை அரசாங்கம் அறிமுகம் செய்யும் என ஜப்பானிய ஊடகமான என்எச்கே வெள்ளிக்கிழமை (ஜூலை 19) தெரிவித்தது. தைவானைச் சேர்ந்த பயணிகளுடன் இந்த நடைமுறை தொடங்கும்.

தங்கள் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பே பெரும்பாலான குடிநுழைவு நடைமுறையைப் பயணிகள் நிறைவுசெய்ய முடியும். இதன்மூலம், ஜப்பான் சென்று இறங்கியதும் விமான நிலையத்தில் நடைமுறைகள் குறையும் என்றது என்எச்கே.

ஜப்பானுக்கு சாதனை அளவாக சுற்றுப்பயணிகள் சென்றதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய தேசிய சுற்றுலா அமைப்பின்படி, 2024 முற்பாதியில் ஏறக்குறைய 17.8 மில்லியன் பேர் ஜப்பானுக்குச் சென்றனர். தொடர்ச்சியாக நான்காவது மாதமாக ஜூனில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் ஜப்பானுக்குச் சென்றனர்.

ஜப்பானிய நாணயத்தின் சரிவால் ஜப்பானுக்குச் செல்வது வெளிநாட்டுப் பயணிகளுக்குச் செலவு கட்டுப்படியாக மாறியுள்ளது.

சுற்றுப்பயணத்தை ஊக்குவிக்க பிரதமர் ஃபுமியோ கிஷிடா வெள்ளிக்கிழமை நடத்தவிருந்த சந்திப்பு ஒன்றில், இவ்வாண்டு ஜப்பானில் வெளிநாட்டுப் பயணிகள் 8 டிரில்லியன் யென் (S$68.3 பில்லியன்) செலவிடுவது கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இருப்பதாக அறிவிக்கவிருந்தார்.

குறிப்புச் சொற்கள்