தற்காப்புத்துறையை மேம்படுத்த பல டிரில்லியன் யென் செலவிடும் ஜப்பான்

தற்காப்புத்துறையை மேம்படுத்த பல டிரில்லியன் யென் செலவிடும் ஜப்பான்

2 mins read
63ebdb8d-10dc-48be-8e30-efee861f5512
ஜப்பானின் அண்மைய தற்காப்புத் துறை வெள்ளை அறிக்கை, உயிரோவியப் பட நூலாக வெளியிடப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

தோக்கியோ: நாட்டின் பொருளியல் பலமாகக் கருதப்படும் உள்நாட்டுத் தற்காப்புத் துறையை, தேசிய வல்லமையின் முதன்மைக்கூறாக மாற்ற ஜப்பான் டிரில்லியன் கணக்கிலான தொகையை முதலீடு செய்கிறது.

வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழல், அண்டை நாடுகளான சீனா, வடகொரியா, ரஷ்யாவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில், சொந்த தற்காப்புக் கேடயத்தை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று ஜப்பான் முடிவு செய்துள்ளது.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சு செவ்வாயக்கிழமை (ஆகஸ்ட் 4) வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் இந்த அச்சுறுத்தல்களையும் நவீன போரின் பாடங்களையும் சுட்டியுள்ளது.

குறிப்பாக, உக்ரேன் தன்னைவிடப் பெரிய எதிரி நாட்டை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் அதில் முக்கியப் பங்கு வகிப்பதாக அறிக்கை கூறியது.

பிரதமர் சானே தக்காய்ச்சியின் அமைச்சரவை, ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் தற்காப்புத் திறன்களை மாற்றி அமைப்பதற்கான ஆண்டறிக்கைக்கு ஒப்புதல் அளித்த இரண்டு வாரங்களில் வெள்ளையறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இலக்கை எட்ட ராணுவச் செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போதைய 2 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்த்த வேண்டியது அவசியமாகிறது. நேட்டோ உள்ளிட்ட அமெரிக்காவின் பிற நட்பு நாடுகளான தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகியவை நிர்ணயித்துள்ள பாதுகாப்புச் செலவின இலக்குகளையும் இந்த அறிக்கை சுட்டியுள்ளது.

“ஜப்பான் முதன்முதலாகத் தனது அரசதந்திர அதிகாரத்தைப் பலப்படுத்த வேண்டும்; அதேவேளையில் தனது தற்காப்பு, பொருளியல், தொழில்நுட்பம், உளவுத்துறை, மனிதவளத் திறன்களை ஒருங்கிணைக்க வேண்டும்,” என்று அந்த வரைவுத்திட்டம் குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய விநியோகக் கட்டமைப்பில் ஜப்பானை ஒரு முக்கியத்துவமிக்க நாடாக உயர்த்தக்கூடிய அனைத்துலக அளவிலான தற்காப்புத் துறையைக் கட்டியெழுப்புவது அதன் முதன்மை நோக்கமாகும்.

“தற்காப்புத்துறை உற்பத்தியும் தொழில்நுட்ப அடித்தளமும் நாட்டின் தற்காப்புத் திறனின் பிரிக்க முடியாத அங்கங்களாகும். அவற்றை வலுப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது,” என்று பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி வலியுறுத்தினார். தற்காப்புத் தளவாடங்கள் பரிமாற்றத்தை எளிதாக்குவது தற்காப்புத் திறனை மேம்படுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் மூன்று முக்கியப் பாதுகாப்பு ஆவணங்களை திருத்தியமைப்பதற்கான முன்னோடியாகவும் அறிக்கை அமைந்துள்ளது.

சீனாவின் ராணுவ நடவடிக்கைகளை “முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய உத்திபூர்வச் சவால்” என்று வர்ணித்துள்ள அறிக்கை, வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகள், ரஷ்யாவின் நவீன ராணுவக் குவிப்புகள் வட்டாரப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரித்துள்ளது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய பல்வேறு கட்டுப்பாடுகள், ஏற்றுமதித் தடைகள் காரணமாக ஜப்பானியத் தற்காப்பு உற்பத்தி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக கட்டுப்பாடுகளுடன் இயங்கி வந்தன. இந்நிலையில், ஜப்பான் தனது உள்நாட்டுத் தற்காப்பு உற்பத்தித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஜப்பான்தற்காப்புசெலவுஅறிக்கைமொத்த உள்நாட்டு உற்பத்தி