செவ்வாயின் நிலவை நோக்கி விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது ஜப்பான்

செவ்வாயின் நிலவை நோக்கி விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது ஜப்பான்

படம்: ராய்ட்டர்ஸ்

20 Oct 2026 - 12:53 pm

2 mins read

தோக்கியோ: ஜப்பானிய விஞ்ஞானிகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) விண்கலம் ஒன்றை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.

செவ்வாய்க்கோளத்தின் நிலவுகளில் ஒன்றிலிருந்து மாதிரிகளைச் சேகரித்துத் திரும்பும் முதல் விண்கலமாக அது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது சூரியக் குடும்பத்தின் தொடக்கம், பூமியில் உயிரினங்களின் தோற்றம் முதலியவை குறித்த அரிய தகவல்களை வெளிக்கொணர உதவும் என்று நம்பப்படுகிறது.

தானேகாஷிமா விண்வெளி நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி அதிகாலை மணி 4.41க்கு (சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை மணி 3.41) இருளடர்ந்த வானில் உந்துகணை சீறிப்பாய்ந்தது.

ஜப்பானிய விண்வெளி ஆய்வகம், நேரலையாக ஒளிபரப்பிய தகவலின்படி, மனிதர்கள் இல்லாத ‘மார்‌ஷியன் மூன்ஸ் எக்ஸ்புளோரேஷன்’ (எம்எம்எக்ஸ்) விண்கலத்தைச் சுமந்து சென்றது அந்த ‘எச்3’ உந்துகணை.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, எச்3 உந்துகணையிலிருந்து விண்கலம் வெற்றிகரமாகப் பிரிந்து, செவ்வாய் மண்டலத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியதாக நேரலை ஒளிபரப்பில் தெரிவிக்கப்பட்டது.

“நான் இந்த நாளுக்காகக் கனவு கண்டேன். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று விண்வெளி ஆய்வகத்தின் விஞ்ஞானி மாரி ஐடா கூறினார்.

“தற்போது நான் உண்மையிலேயே நிம்மதியாக உணர்கிறேன்,” என்றார் அவர்.

ஜப்பானில் அதிகாலை வேளையாக இருந்தபோதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நேரலையைக் கண்டு, வாழ்த்துச் செய்திகளைப் பதிவிட்டனர்.

இந்த விண்கலம் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதவாக்கில் செவ்வாய்க்கோளத்துக்கு அருகில் சென்று, அதன் நிலவுகளில் ஒன்றான ஃபோபோஸைச் சுற்றிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஐடிஃபிக்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள பிரெஞ்சு-ஜெர்மன் விண்கலம், போபோஸ் மேற்பரப்பில் பயணம் செய்யும் முதல் ஊர்தியாக இருக்கும். இது பாதுகாப்பான தரையிறக்கத்தை உறுதி செய்வதற்கான மேற்பரப்பு ஆய்வுகளைச் செய்யும்.

எம்எம்எக்ஸ் விண்கலம் ஃபோபோஸை அடைந்ததும் செவ்வாய்க்கோளத்தின் அருகில் திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஆண்டுக் காலத்தில், அதன் மேற்பரப்பில் இருந்து குறைந்தது 10 கிராம் எடையுள்ள பொருள்களைச் சேகரிக்கும்.

செவ்வாய் மண்டலத்திற்குச் சென்று ரும்பும் முதல் இருவழிப் பயணமாக இந்தத் திட்டம் அமையவிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய விண்வெளி அமைப்புகள், பல பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்