தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி அமெரிக்காவுடன் அரிய வகைக் கனிம வர்த்தகம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகப் புதன்கிழமை (மார்ச் 18) தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் திருவாட்டி தக்காய்ச்சி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் சந்திக்கவுள்ளார். அப்போது அவர் பசிபிக் கடலில் உள்ள ஒரு தீவின் ஆழ்கடல் பகுதியில் எடுக்கப்பட்ட அரிய வகைக் கனிமம் குறித்துப் பேசுவார்.
கடந்த மாதம் தோக்கியோ அதிகாரிகள் ஆழ்கடலில் இருந்து படிமங்களை எடுத்தனர். அதை ஆராய்ந்தபோது அதில் 17 உலோகங்கள் இருந்தன. அந்த உலோகங்கள் மின் வாகனங்கள், கணினி சார்ந்த பொருள்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
படிமங்கள் 6,000 அடி ஆழத்தில் எடுக்கப்பட்டது என்றும் அது மினமிடோரிஷிமா தீவு அருகே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
உலக நாடுகள் பல சீனாவிடம் இருந்துதான் அரிய வகைக் கனிமங்களை வாங்குகின்றன.
சீனாவை அதிகம் சார்ந்து இருக்கக்கூடாது என்பதில் ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. அதனால் தற்போது கிடைத்துள்ள படிமங்களை வைத்து அடுத்தகட்டத்திற்கு நகர நாடுகள் திட்டமிடலாம்.
“கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரு டிரம்ப் ஜப்பான் வந்திருந்தபோது வளங்களை மேம்படுத்துவது குறித்துப் பேசினோம். இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் ஜப்பானும் அமெரிக்காவும் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன,” என்று திருவாட்டி தக்காய்ச்சி ஜப்பானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“மினமிடோரிஷிமா தீவில் கிடைத்த கனிமம் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. எதிர்வரும் ஜப்பான்- அமெரிக்கா உச்சநிலைச் சந்திப்பில் இது குறித்துப் பேசப்படும்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
ஜப்பான்- அமெரிக்கா உச்சநிலைச் சந்திப்பு மார்ச் 18, 19, 20ல் நடக்கிறது.
இதற்கிடையே, மினமிடோரிஷிமா தீவைச் சுற்றியுள்ள பகுதியில் மேலும் பல அரிய வகைக் கனிமங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

