ரயில் நிலையங்களில் உயிர்மாய்ப்பைத் தடுக்க ‘ஏஐ’ மூலம் கண்காணிக்கும் ஜப்பான்

ரயில் நிலையங்களில் உயிர்மாய்ப்பைத் தடுக்க ‘ஏஐ’ மூலம் கண்காணிக்கும் ஜப்பான்

1 mins read
552bb6a8-4004-468b-9ca4-dfe9c3c7a1bb
ரயில் நிலையத் தளமேடைகளின் ஓரத்தில் எவரேனும் அங்கும் இங்கும் உலாவுவது அல்லது நீண்ட நேரம் காத்திருப்பது போன்ற நடத்தைகளைப் பாதுகாப்புப் படக்கருவிகள் மூலம் ‘ஏஐ’ கண்காணிப்பு முறை பகுப்பாய்வு செய்கிறது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தோக்கியோ: ஜப்பானில் கிட்டத்தட்ட 40 ரயில் நிலையங்களிலும் வணிகக் கட்டடங்களிலும் குதித்து உயிரை மாய்த்துக்கொள்வதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவுக் (ஏஐ) கண்காணிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தோக்கியோவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் ‘அசில்லா’ என்ற நிறுவனம் அந்த அமைப்பை உருவாக்கியுள்ளது.

தளமேடைகளின் ஓரத்திலோ அல்லது கட்டடங்களின் மேல்தளத்திலோ எவரேனும் அங்கும் இங்கும் உலாவுவது அல்லது நீண்ட நேரம் காத்திருப்பது போன்ற நடத்தைகளைப் பாதுகாப்புப் படக்கருவிகள் மூலம் அந்த ‘ஏஐ’ முறை பகுப்பாய்வு செய்கிறது.

இதன்மூலம் அவர்கள் கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை அவ்வமைப்பு மதிப்பிடுகிறது.

அத்தகைய அறிகுறிகளைக் கண்டறிந்தவுடன் அவ்வமைப்பு உடனடியாகப் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் நிலைய ஊழியர்களுக்கும் எச்சரிக்கை அனுப்புகிறது. சில வேளைகளில், அங்குள்ள ஒலிபெருக்கிகள் மூலமாகவும் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

அத்தகையதொரு சம்பவத்தின்போது, கடைத்தொகுதி ஒன்றில் வாடிக்கையாளர்கள் செல்லக்கூடாத பகுதியில் ஒருவர் இருந்ததை அந்த அமைப்பு கண்டறிந்தது. உடனே பாதுகாப்பு ஊழியர் அவரிடம் சென்று விசாரித்தபோது, தான் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கத்தில் அங்கு வந்ததாக அவர் கூறியதாக ‘அசில்லா’ நிறுவனம் தெரிவித்தது.

அசில்லா நிறுவனம் 2022ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 200 கடைத்தொகுதிகளுடனும் மற்ற அமைப்புகளுடனும் இணைந்து, கிட்டத்தட்ட ஏழு மில்லியன் பாதுகாப்புப் படக்கருவி காட்சிகளைக் கொண்டு அந்த ‘ஏஐ’ அமைப்பிற்குப் பயிற்சி அளித்துள்ளது.

இதன்மூலம் உயிர்மாய்ப்பு அறிகுறிகள் மட்டுமின்றி, திடீர் உடல்நலக்குறைவு, மயக்கநிலை, வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றையும் அந்த அமைப்பால் கண்டறிய முடிகிறது.

குறிப்புச் சொற்கள்
ஜப்பான்செயற்கை நுண்ணறிவுகடைத்தொகுதி