ஜப்பானில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம்; ‘சக்திவாய்ந்த’ நிலநடுக்கம் ஏற்பட சாத்தியம் என எச்சரிக்கை

ஜப்பானில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம்; ‘சக்திவாய்ந்த’ நிலநடுக்கம் ஏற்பட சாத்தியம் என எச்சரிக்கை

2 mins read
4fdfe530-dbde-4c88-a4d9-65fe711f30da
ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் சுனாமி எச்சரிக்கை குறித்த செய்தியைத் தொலைக்காட்சித் திரை காட்டுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பானின் வடக்குப் பகுதியில் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு 8.0 அல்லது அதற்கும் அதிகமான ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட சாத்தியமுள்ளதாக அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

“சாதாரண நேரத்தைவிட தற்போது புதிய, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது,” என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 182,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அந்தந்த உள்ளூர் நகராட்சிகள் அறிவுறுத்தியுள்ளன. இருப்பினும், இது கட்டாய உத்தரவு கிடையாது என்று தீயணைப்பு, பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்குப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரத்திலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் வடக்கே நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோதிலும், தலைநகர் தோக்கியோவில் உள்ள பெரிய கட்டடங்கள் அதிர்ந்தன.

திங்கட்கிழமை மாலை 4.53 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி மாலை 3.53 மணி) வடக்கு இவாட் மாநிலத்திற்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடக்கத்தில் இதன் அளவு 7.4 ரிக்டர் எனக் கணிக்கப்பட்டது, பின்னர் அது 7.5 ஆகவும் இறுதியில் 7.7 ஆகவும் திருத்தப்பட்டது.

இச்சம்பவத்தில் கடுமையான காயங்கள் அல்லது பெரிய அளவிலான சேதங்கள் குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் வரவில்லை என்று அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் மினோரு கிஹாரா செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்