வரவுசெலவுத் திட்டத்தில் $76 பில்லியன் கோரும் ஜப்பானியத் தற்காப்பு அமைச்சு

1 mins read
19767021-bc83-455d-8228-810d5279f535
ஜப்பானியத் தற்காப்பு அமைச்சு, தற்காப்புப் படை வீரர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் திறனாளர்களை ஈர்க்கவும் தக்கவைத்துக்கொள்ளவும் நிதி ஒதுக்கீட்டைக் கோருகிறது. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானியத் தற்காப்பு அமைச்சு, அடுத்த நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கூடுதல் நிதி ஒதுக்கீட்டைக் கோரியுள்ளது.

வட்டாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ராணுவத் திறன்களை அதிகரிக்க அது இலக்கு கொண்டுள்ளது.

அடுத்த நிதியாண்டுக்கான நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தில் தற்காப்புக்கு 8.5 டிரில்லியன் யென் (76 பில்லியன் வெள்ளி) நிதி ஒதுக்கும்படி அது கேட்டுள்ளது. ஒப்புநோக்க, இந்த ஆண்டு முதற்கட்டமாக ஒதுக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் அது 10.5 விழுக்காடு அதிகம்.

அமைச்சு கோரும் கூடுதல் நிதியில், புதிய செயற்கைக்கோள் உளவுத் தகவல் சேகரிப்புக் கட்டமைப்பை உருவாக்கத் தேவைப்படும் நிதியும் அடங்கும். ஏவுகணைகளை அடையாளம் காணும் திறன்களை மேம்படுத்த அக்கட்டமைப்பு உதவும்.

முன்னதாக, ஐந்து ஆண்டுகளில் ஜப்பானின் ராணுவச் செலவுகளை 43 டிரில்லியன் யென்னுக்கு அதிகரிக்கப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உறுதி கூறினார்.

வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளைப் பாய்ச்சி வருகிறது. புதிய ஆயுதங்களையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இதனால், கிழக்காசியாவில் ராணுவப் பதற்றம் தணிவதாகத் தெரியவில்லை.

செப்டம்பர் 2ஆம் தேதி முதல்முறையாகச் சீன ராணுவ விமானம் ஒன்று ஜப்பானிய வான்வெளிக்குள் பறந்து சென்றதாகக் கூறப்பட்டது. இது பாதுகாப்பு மிரட்டல் என்றும் எல்லை மீறிய நடவடிக்கை என்றும் ஜப்பான் சாடியது.

இந்நிலையில், அடுத்த தலைமுறை போர் விமானங்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் உருவாக்குதல், வாங்குதல், ராணுவத்திற்குத் திறனாளர்களை ஈர்த்தல், தக்கவைத்துக் கொள்ளுதல் போன்றவற்றுக்கும் ஜப்பானிய ராணுவம் நிதி கோருகிறது.

குறிப்புச் சொற்கள்