புகைப்பழக்கம் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஜப்பானின் ஒசாகா மாநிலத்தில் புகைபிடிக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு இப்பழக்கம் செலவுமிக்கதும்கூட.
அந்த வகையில், 61 வயது அரசாங்க ஊழியர் ஒருவர் தமது சம்பளத்தை ஊதித் தள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்.
பதினான்கு ஆண்டுகளாக வேலை நேரத்தில் 4,500க்கும் மேற்பட்ட முறை புகைபிடித்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஏறக்குறைய 1.44 மில்லியன் யென் (S$14,700) அபராதம் விதிக்கப்பட்டது.
ஒசாகாவின் நிதித்துறையில் வேலை செய்து வந்த அந்த ஊழியர் மீதும் அவருடைய இரு சகாக்கள் மீதும் கடந்த திங்கட்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வேலை நேரத்தில் திரும்ப திரும்ப புகைத்ததற்காக அந்த ஆறு மாதங்களுக்கு அந்த மூவரது சம்பளத்திலும் 10% குறைக்கப்படும்.
நிதித்துறையில் அந்த 61 வயது ஊழியர் பணியாற்றிய 14.5 ஆண்டுகளில், 355 மணி 19 நிமிட நேரம் அவர் புகைபிடித்ததை மாநில அரசாங்கம் கண்டறிந்தது.
ஒசாகாவில் புகைபிடிப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்து வருகின்றன. 2008ஆம் ஆண்டிலிருந்து அலுவலகங்களிலும் பொதுப் பள்ளிகளிலும் புகைபிடிப்பதற்கு ஒட்டுமொத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்கள் பணி நேரத்தின்போது புகைக்க 2019ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

