மோசடியால் $2.7 பில்லியன் இழந்த ஜப்பானியர்கள்

மோசடியால் $2.7 பில்லியன் இழந்த ஜப்பானியர்கள்

2 mins read
f9b05501-dcb6-4a76-a628-ca7b4bf2113c
ஜப்பானில் காதல் மோசடியால் மட்டும் 5,604 பேர் ஏமாற்றப்பட்டனர். - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானிய மக்கள் 2025ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 2.7 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை மோசடியாளர்களிடம் இழந்தனர்.

போலி முதலீடுகள், காதல் மோசடி போன்றவற்றைச் சமூக ஊடகத் தளங்கள் மூலம் மோசடியாளர்கள் மேற்கொண்டனர்.

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டு மோசடி மூலம் இழந்த தொகை 62.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

மோசடி இழப்புகள் குறித்த தகவலை ஜப்பானியக் காவல்துறை வியாழக்கிழமை (பிப்ரவரி 12) வெளியிட்டது.

ஜப்பானிய மக்கள் முதலீட்டு மோசடியில் அதிகமாகச் சிக்கியுள்ளனர். 9,538 பேர் தங்களது முதலீடுகளை இழந்தனர். அதன் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 900 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

வயது அடிப்படையில் பார்த்தால் 50 வயதுகளில் உள்ள மக்கள் மோசடியாளர்களின் வலையில் அதிகமாகச் சிக்கியுள்ளனர். அதற்கடுத்த இடங்களில் 60 வயதுகளிலும் 40 வயதுகளிலும் உள்ள மக்கள் உள்ளனர்.

காதல் மோசடியால் மட்டும் 5,604 பேர் ஏமாற்றப்பட்டனர். போலியான படங்கள், அடையாளங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு மோசடியாளர்கள் ஒருவரின் நம்பிக்கையைப்பெற்று அவரின் சேமிப்புகளை அபகரிக்கின்றனர்.

இதிலும் அதிகம் பாதிக்கப்பட்டது 50 வயதுகளில் உள்ள மக்கள். அதற்கடுத்த இடத்தில் 40 வயதுகளில் உள்ளவர்கள் உள்ளனர்.

ஆள்மாறாட்டம், அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றுவது உள்ளிட்ட மோசடி சம்பவங்களும் கூடியுள்ளன. காவல்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடி செய்த சம்பவங்கள் மூலம் மட்டும் பலர் ஏமாந்துள்ளனர்.

மோசடியாளர்களால் ஏமாற்றப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினர் தங்களது பணத்தை இணைய வழி வங்கிச் சேவை அல்லது தானியங்கி வங்கி இயந்திரம் மூலம் மோசடியாளர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்