தோக்கியோ: கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஈரான் பிடியில் சிக்கியிருந்த ஜப்பானியர் விடுவிக்கப்பட்டார்.
இதனை ஜப்பானிய அரசு உறுதிப்படுத்தியிருப்பதாக கியோடோ செய்தி தெரிவிக்கிறது.
அவர் என்எச்கே ஒலிபரப்பு நிறுவனத்தின் டெஹ்ரான் செய்தி அலுவலகத் தலைவர் என நம்பப்படுகிறது.
“ஜனவரி 20ஆம் தேதி ஈரான் அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்ட ஜப்பானியர் ஏப்ரல் 6ஆம் தேதி விடுவிக்கப்பட்டதை ஈரானிலுள்ள ஜப்பானியத் தூதரகம் உறுதிசெய்துள்ளது,” என்று அரசாங்கப் பேச்சாளர் மினோரு கிகாரா தெரிவித்தார்.
“விடுதலை செய்யப்பட்டவரை ஈரானுக்கான ஜப்பானியத் தூதர் நேரில் சந்தித்தார். அவர் நலமுடன் இருக்கிறார்,” என்றும் திரு கிகாரா செய்தியாளர்களிடம் கூறினார்.
இத்தகவலை உறுதிப்படுத்த முயன்றபோது, எச்எச்கே நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியது.
ஜனவரி 20ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட என்எச்கே நிறுவனத்தின் டெஹ்ரான் செய்தி அலுவலகத் தலைவர் அரசியல் கைதிகளுக்கான சிறையில் அடைக்கப்பட்டார் என்று முன்னதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டன.
அவர் கைதுசெய்யப்பட்டதை அப்போது உறுதிப்படுத்திய ஜப்பானிய அரசின் பேச்சாளர், அதுகுறித்த கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். என்எச்கே நிறுவனமும் கருத்துரைக்க மறுத்துவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, கடந்த மார்ச் மாதமும் தன் பிடியிலிருந்த ஜப்பானியர் ஒருவரை ஈரான் விடுவித்தது நினைவுகூரத்தக்கது.

