யாவாடா: ஜப்பானில் பதவியில் இருக்கும்போது மகப்பேறு விடுப்பு எடுத்த முதல் மேயராக வரலாறு படைத்துள்ளார் ஷோக்கோ கவாடா.
யாவாடா நகர மேயரான அவரது மகப்பேறு விடுப்பு திங்கட்கிழமை (ஜூலை 20) தொடங்கியது. அவர் விடுப்பது எடுத்தது ஜப்பானில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஜப்பானின் ஆக இளைய பெண் மேயராக 2023ஆம் ஆண்டு 33 வயதில் பொறுப்பேற்ற கவாடா, செப்டம்பர் மாதம் குழந்தையைப் பெற்றெடுக்க உள்ளார்.
கிட்டத்தட்ட 69,000 பேர் வசிக்கும் மேற்கு ஜப்பான் நகரான யாவாடாவில் நகராட்சி ஊழியர்களுக்கு 16 வார மகப்பேறு விடுப்பு உள்ளது. ஆனால், மேயருக்கு அந்தச் சலுகை இல்லை என்பதால் பிரசவத்திற்கு முன் இரண்டு மாதங்களும் பிறகு இரண்டு மாதங்களும் விடுப்பு எடுக்கும் புதிய விதியை அவரே உருவாக்கினார்.
அவர் விடுப்பில் இருக்கும்போது துணை மேயர் அன்றாட நகராட்சிப் பணிகளைக் கவனிப்பார். முக்கிய முடிவுகளில் கவாடா தொடர்ந்து பங்கேற்பார்.
அவருக்குப் பெரும்பாலான உள்ளூர்வாசிகளும் சக ஊழியர்களும் ஆதரவு அளித்தபோதும், விடுமுறைக் காலத்தில் முழுச் சம்பளம் பெறுவது, பணிப் பொறுப்பு குறித்து சமூக ஊடகங்களில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்களும் தயக்கமின்றிக் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடிய சமூகச் சூழலை உருவாக்க வேண்டும். பிறப்பு விகிதம் குறைந்துவரும் ஜப்பானில் இத்தகைய மாற்றங்கள் மிகவும் அவசியம்,” என்று கவாடா கூறியுள்ளார்.
ஜப்பானியப் பெண்கள் சட்டபூர்வமான 14 வார மகப்பேற்று விடுப்பு எடுக்கலாம். பொதுவாக, அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு சம்பளமும், குழந்தைப் பேறு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. சில அரசு ஊழியர்கள் சிறந்த சலுகைகளைப் பெறுகின்றனர்.
சானே தக்காய்ச்சி 2025ல் ஜப்பானின் முதல் பெண் பிரதமரானபோதிலும், அந்நாட்டின் பாலின இடைவெளி, குறிப்பாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் களத்தில் அதிகமாகவே காணப்படுகிறது.

