மகளைப் பட்டினி போட்ட தாயார் கைது

மகளைப் பட்டினி போட்ட தாயார் கைது

1 mins read
c9624359-8efc-4c6a-b737-95893217cf52
படம்: - தமிழ் முரசு

ஒசாகா: உதவித் தொகையைப் பெறும் நோக்கில், ஒன்பது வயது மகளைப் பட்டினி போட்டதாகச் சந்தேகிக்கப்படும் 34 வயது தாயாரை ஒசாகா நகர் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். பட்டினி போடப்பட்ட அந்தச் சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஒசாகாவின் டாய்தோ பகுதியில் பணிபுரியும் பகுதிநேர ஊழியரான கசூமி நாவாட்டா மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டதால் காவல்துறையினர் அவரைக் கைதுசெய்தனர். அவர் தமது மகளுக்கு உணவுக் கொடுக்காமல் பட்டினி போட்டதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, அந்தச் சிறுமியின் ரத்தச் சர்க்கரை அளவு பெரிய அளவில் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டிலிருந்து அந்தச் சிறுமி 43 முறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்தக் காலகட்டத்தில் நாவாட்டா உதவித்தொகை, காப்புறுதி அனுகூலங்கள் என மொத்தம் 5.7 மில்லியன் யென் (S$54,150) பெற்றதாகக் கூறப்படுகிறது.

நாவாட்டா வேண்டுமென்றே தமது மகளுக்குப் போதிய உணவு வழங்காமல், அவள் மீண்டும் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொண்டதாகக் காவல்துறையினர் சந்தேகித்தனர். அதன் தொடர்பில், அவர்கள் விசாரணை நடத்திவந்தனர்.

தற்போது சிறுமியின் உடல்நிலை மேம்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நாவாட்டா தமக்குக் கிடைத்த பணத்தை அழகுப் பராமரிப்புக் கடைகளிலும் வெளியில் சாப்பிடுவதற்கும் செலவிட்டதாக அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்