ஜப்பானிய நாடாளுமன்றம் கலைப்பு; அடுத்த மாதம் தேர்தலை நடத்த முடிவு

2 mins read
c2a3a3f8-2839-436a-b4ec-3ef195bba831
ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சகானே தக்காய்ச்சி. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பானிய நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) கலைக்கப்பட்டது.

அதற்கான உத்தரவை பிரதமர் சானே தக்காய்ச்சி பிறப்பித்தார்.

நாடாளுமன்றத்தின் கீழவை அதிகாரபூர்வமாகக் கலைக்கப்படுவதற்கான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் மன்ற நாயகர் வாசித்தார்.

மன்ற உறுப்பினர்கள் உரத்த குரலுடன் அதனை வரவேற்றனர்.

பிரதமர் தக்காய்ச்சியின் மிதவாத ஜனநாயகக் கட்சி (எல்டிபி)யும் ஜப்பான் புத்தாக்கக் கட்சியும் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

இந்தக் கூட்டணி, பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்க உள்ளது.

ஜப்பானில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற ஒன்றரை ஆண்டுகளில் மீண்டும் ஒரு தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2024 அக்டோபர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி பெரும்பான்மை பெறத் தவறியது. 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு அப்படி ஒரு நிலை முதன்முறை ஏற்பட்டது.

இருப்பினும், சிறிய கட்சி ஒன்றுடன் இணைந்து சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்பட்டு, தற்போது வரை அது தொடருகிறது.

ஆளும் கூட்டணிக்கு நாடாளுமன்றக் கீழவையில் பெரும்பான்மை பலம் இல்லாததால் மக்கள்நலன் திட்டங்களைச் செயல்படுத்துவது கடினம்.

இந்நிலையில், ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றுள்ள திருவாட்டி தக்காய்ச்சிக்கு இளையர்களிடம் அதிக ஆதரவு உள்ளது.

செல்வாக்கை வாக்குகளாக மாற்றி பெரும்பான்மை பெறும் நோக்கில் புதிதாகத் தேர்தலை நடத்த திருவாட்டி தக்காய்ச்சி முடிவெடுத்தார். அதற்காக நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் குறித்து அவர் ஜனவரி 19ஆம் தேதி அறிவித்தார்.

மக்களின் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்து வரும் வேளையில் நாட்டைத் தற்காப்பதற்கான செலவும் கூடிக்கொண்டே செல்கிறது.

அவற்றுக்குத் தீர்வுகாணும் திட்டங்களைத் தடங்கலின்றி நிறைவேற்ற திருவாட்டி தக்காய்ச்சி திட்டமிட்டுள்ளார்.

ஆயினும், ஜப்பானிய மக்களிடையே அவருக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு ஆளும் கட்சிக்கு வாக்குகளைப் பெற்றுத் தருமா என்பது அரசியல் பகுப்பாய்வாளர்களின் கேள்வி.

குறிப்புச் சொற்கள்