மத்திய கிழக்கிற்குப் போர்க்கப்பலை அனுப்ப ஜப்பானியர்கள் எதிர்ப்பு

மத்திய கிழக்கிற்குப் போர்க்கப்பலை அனுப்ப ஜப்பானியர்கள் எதிர்ப்பு

2 mins read
e5abaa55-f837-4482-8249-a2c72076a4ad
ஈரான்மீது அமெரிக்கா நடத்திவரும் தாக்குதலுக்கும் ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சிக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மார்ச் 20ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போராட்டக்காரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: மத்திய கிழக்கிற்குப் போர்க்கப்பல்களை அனுப்ப பெரும்பான்மையான ஜப்பானிய மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்க உதவுமாறு தமது நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

கடந்த வார இறுதியில் யோமியூரி நாளிதழ் நடத்திய கருத்தாய்வில், ஜப்பானின் தற்காப்புப் படைகளை மத்தியக் கிழக்கு வட்டாரத்திற்கு அனுப்ப 67 விழுக்காடு ஜப்பானியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதே காலகட்டத்தில் ஏஎன்என் நடத்திய கருத்துக்கணிப்பில் 52 விழுக்காடு ஜப்பானிய மக்கள் படைகளை அனுப்புவதற்கு எதிராகத் தங்களது வாக்கினைப் பதிவுசெய்துள்ளனர்.

மத்திய கிழக்கிற்குப் படைகளை அனுப்பும் ஜப்பானிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு ஒருபுறம் வலுத்திருந்தாலும், அந்நாட்டுப் பிரதமர் சானே தக்காய்ச்சி தலைமையிலான அமைச்சரவைக்கு முறையே 71 விழுக்காடும் 65.2 விழுக்காடும் என அதிக அளவிலான ஆதரவு நீடிக்கிறது.

குறிப்பாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் ஜப்பானியப் பிரதமர் மார்ச் 19ஆம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவுகளைப் பெரும்பான்மையான மக்கள் சாதகமாகவே கருதுகின்றனர்.

ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதில் ஜப்பானின் ஆதரவு குறித்து அதிபர் டிரம்ப் உடன் நேருக்கு நேர் விவாதிப்பதைத் திருவாட்டி தக்காய்ச்சி தவிர்த்தார்.

இருப்பினும், ஜப்பான் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஜப்பானின் பெருவாரியான கச்சா எண்ணெய் இறக்குமதி இந்த நீரிணையையே சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்குத் தேவையான உதவிகளை வழங்க ஜப்பான் தயாராக இருந்தபோதிலும், சட்டச் சிக்கல்கள் காரணமாகச் செய்யக்கூடியவற்றிற்கு வரம்புகள் உள்ளன என்பதை அதிபர் டிரம்ப்பிடம் விளக்கியதாகத் திருவாட்டி தக்காய்ச்சி கூறினார்.

இருப்பினும், போர்நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு உதவி புரிவது குறித்துப் பரிசீலிக்கப்படலாம் என ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் டொஷிமிட்சு மொடெகி கடந்த வாரயிறுதியில் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள், பெரும்பாலான ஜப்பானியர்கள் போரில் ராணுவ ரீதியாகத் தலையிடுவதை ஆதரிப்பதில் தயக்கம் காட்டுவதையே தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்