தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் ஷிகேரு இஷிபா, இவ்வாரம் ஹேக் நகரில் நடைபெற உள்ள நேட்டோ உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார் என்றும் அவர் தமது பங்கேற்பை ரத்து செய்துவிட்டார் என்றும் அதுபற்றி அறிந்த தகவல் ஒன்று திங்கட்கிழமை (ஜூன் 23) தெரிவித்தது.
ஐபி4 (IP4) எனப்படும் இந்தோ பசிபிக் நாடுகளின் கூட்டமைப்பில் ஜப்பான் இடம்பெற்று உள்ளது. நேட்டோவுக்கும் ஐபி4 அமைப்புக்கும் இடையே திட்டமிடப்பட்டு இருந்த கூட்டம் நடைபெறாது என்பதை அறிந்ததால் திரு இஷிபா தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.
மேலும், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வருகையும் உறுதியாகவில்லை என்பதால் ஜப்பானியப் பிரதமர் நேட்டோ கூட்டத்திற்குச் செல்லவில்லை என்றது அந்தத் தகவல்.
இருப்பினும், ஜப்பானைப் பிரதிநிதித்து வெளியுறவு அமைச்சர் தக்கேஷி இவாயா அதில் கலந்துகொள்ள இருப்பதாகவும் அது தெரிவித்தது.
ஐபி4 அமைப்பில் அங்கம் வகிக்கும் தென்கொரியாவும் ஆஸ்திரேலியாவும் நேட்டோ உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஏற்கெனவே அறிவித்துவிட்டன. இப்போது ஜப்பானும் அதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஐபி4 நாடுகளுடன் உச்சநிலைக் கூட்டம் ஒன்றை நடத்த டிரம்ப் திட்டமிட்டு இருந்ததாகவும் தற்போது அவர் அங்கு செல்லவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குக் கிடைத்த தகவல் ஒன்று குறிப்பிட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் நேட்டோ உச்சநிலைக் கூட்டத்தில் ஜப்பான் பங்கேற்று வந்துள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து அந்தக் கூட்டத்தில் பங்கேற்க அப்போது முதல்முறையாக ஜப்பானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

