ஜூலையில் இந்தியா சென்று மோடியைச் சந்திக்க ஜப்பானியப் பிரதமர் திட்டம்

ஜூலையில் இந்தியா சென்று மோடியைச் சந்திக்க ஜப்பானியப் பிரதமர் திட்டம்

2 mins read
8038e6c1-2cc3-4d90-84d4-b94c32604fb3
ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி வரும் ஜூலை மாதத் தொடக்கத்தில் இந்தியா செல்லத் திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டின் அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாட அவர் முடிவுசெய்துள்ளதாகவும் அவை கூறின.

குறிப்பாக, அத்தியாவசியப் பொருள்களின் விநியோகத் தொடரை வலுப்படுத்துவதில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பற்றி திரு மோடியுடன் திருவாட்டி தக்காய்ச்சி பேச உள்ளார்.

மேலும், தற்காப்பு, பொருளியல் விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவு, பகுதி மின்கடத்தி போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் ஆகிய அம்சங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் திருவாட்டி தக்காய்ச்சி எண்ணியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மும்பையையும் அகமதாபாத்தையும இணைக்கும் அதிவேக ரயில் திட்டம் குறித்தும் இரு தலைவர்கள் பங்கேற்கும் உச்சநிலைக் கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வரும் இந்தோ-பசிபிக் வட்டாரத்தை சுதந்திர பகுதியாக முன்னெடுத்துச் செல்ல இந்தியாவை ஒரு முக்கியமான கூட்டாளியாக ஜப்பான் கருதுகிறது.

அதற்கான முன்னெடுப்பை திருவாட்டி தக்காய்ச்சியின் அரசியல் குருவான, மறைந்த ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே கடந்த 2016ஆம் ஆண்டு முதன்முதலாக மேற்கொண்டார்.

சீனா சொந்தம் கொண்டாடும் தைவானைப் பாதுகாக்க அமெரிக்காவுடன் இணைந்து ஜப்பான் தனது தற்காப்புப் படைகளை அங்கு குவிக்கக்கூடும் என்று கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் திருவாட்டி தக்காய்ச்சி கூறினார். அவரது அந்தக் கருத்து சீனாவுக்கு சினமூட்டியது.

அதேபோல, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாக எல்லைப் பூசல் நிலவி வருகிறது.

ஆயினும், இந்தியா மீது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அளவுக்கு அதிகமாக வரி விதித்ததைத் தொடர்ந்து, பொருளியலை நிலைப்படுத்தும் பொருட்டு சீனாவுடனான பகையை விலக்கி நட்புகொள்ளும் முயற்சியில் இந்தியா இறங்கியது.

குறிப்புச் சொற்கள்
ஜப்பான்செயற்கை நுண்ணறிவுதைவான்