தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி தமது அரசாங்கத்துக்கு பொதுமக்களின் வலுவான ஆதரவைத் திரட்ட பொதுத் தேர்தல் நடத்துவது குறித்தத் திட்டத்தை ஆளும் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் தெரிவிக்க உள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
ஜப்பானின் முதல் பெண் பிரதமராகக் கடந்த அக்டோபர் மாதம் திருவாட்டி தக்காய்ச்சி பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவை ஏறத்தாழ 70 விழுக்காட்டுப் பொதுமக்கள் ஆதரிக்கின்றனர்.
இருப்பினும், நாடாளுமன்ற மக்களவையில் அவரது கட்சிக்குப் போதுமான பெரும்பான்மை இல்லை. அதனால், தமது அரசாங்கம் செயல்படுத்த இருக்கும் கொள்கைகளுக்கு முழு அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவு குறித்து தமது மிதவாத ஜனநாயகக் கட்சியின் (LDP) மூத்த தலைவர்களிடம் அடுத்த வாரம் கூற இருப்பதாக ‘நிக்கேய் ஷிம்புன்’ வர்த்தக நாளேடு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் மற்றும் கட்சியின் தரப்புகள் அவ்வாறு தெரிவித்ததாக அந்த நாளேடு கூறியது.
அதேபோல, திருவாட்டி தக்காய்ச்சி தமது திட்டத்தை விளக்க மூத்த தலைவர்களின் கூட்டத்தை கூட்டி இருப்பதாக என்எச்கே அரசாங்கத் தொலைக்காட்சி கூறியது.
இற்றொரு தொலைக்காட்சியான ஆசாஷி, ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜப்பான் புத்தாக்கக் கட்சியுடன் (JIP) மிதவாத ஜனநாயகக் கட்சியின் மேலிடத் தலைவர்கள் புதன்கிழமை (ஜனவரி 14) பின்னேரத்தில் சந்தித்துப் பேசுவார்கள் என்று கூறியது.
மக்களவையில் ஆளும் கட்சி பெரும்பான்மை பெற ஜப்பான் புத்தாக்கக் கட்சி கடந்த நவம்பரில் உதவியது. மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும்கட்சியில் இணைந்த பின்னர் ஆளும் கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், நாடாளுமன்ற மேலவையில் அந்தக் கூட்டணி இன்னும் சிறுபான்மையாக உள்ளது.
எந்த ஒரு மசோதாவையும் நிறைவேற்ற இரு அவைகளின் ஒப்புதல் அவசியம்.
நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் நடத்துவது குறித்து அரசாங்கப் பேச்சாளர் மினோரு கிஹாராவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் கருத்துக் கூற மறுத்துவிட்டார். “இந்த விவகாரத்தில் பிரதமர்தான் முடிவெடுக்க வேண்டும்,” என்று அவர் ஒற்றை வரியில் பதில் சொன்னார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் நாளான ஜனவரி 23ஆம் தேதி திருவாட்டி தக்காய்ச்சி நாடாளுமன்றத்தைக் கலைத்தால், பொதுத் தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடப்பதற்கான சாத்தியம் அதிகம் என்று பல்வேறு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

