தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சியின் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு விகிதம் 50 விழுக்காட்டுக்குக் கீழ் சரிந்திருப்பதாகக் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் அவர் பதவியேற்ற பிறகு, அவரின் நிர்வாகத்திற்கான ஆதரவு இந்த அளவுக்குக் குறைவாகச் சென்றதில்லை.
அக்டோபர் 17, 18ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், தக்காய்ச்சி நிர்வாகத்திற்கான ஆதரவு விகிதம் 49.1 விழுக்காடாகப் பதிவானது.
அண்மையில் வேளாண் அமைச்சராக இருந்த கஸுவோ யானாவின் பதவி விலகல் விவகாரத்தில், பிரதமர் தக்காய்ச்சி தாமதமாக நடவடிக்கை எடுத்ததே ஆதரவு குறைந்ததற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
தமக்கு ஆதரவளிக்காத நகராட்சிகளுக்கான சாலை நிதியுதவியைக் குறைப்பதாகத் திரு யானா கூறிய கருத்து சர்ச்சையானதை அடுத்து, அவர் பதவி விலகினார்.
எனினும், அவரைப் பதவியிலிருந்து நீக்கும் பிரதமரின் முடிவு மிகவும் தாமதமாக வந்தது என்று 57.7 விழுக்காட்டினரும் அவர் பதவி விலகியது இயல்பான ஒன்றே என்று 81.5 விழுக்காட்டினரும் தெரிவித்தனர்.
கடந்த மாதம் மேற்கொண்ட அமைச்சரவை மாற்றத்தின்போது திரு யானாவை அமைச்சராக நியமித்தார் ஜப்பானியப் பிரதமர் தக்காய்ச்சி. ஆனால், இந்த மாதத் தொடக்கத்தில் உள்ளூர் ஊடகங்களில் வெளியான சாலை நிதி குறித்த அவரின் கருத்துக்காக நாடாளுமன்றத்திலேயே திருவாட்டி தக்காய்ச்சி அவரை வெளிப்படையாகக் கண்டித்திருந்தார்.
