கீழவைத் தேர்தலில் ஜப்பானியப் பிரதமரின் கட்சி வெற்றிபெறும்: கருத்துக்கணிப்பு

கீழவைத் தேர்தலில் ஜப்பானியப் பிரதமரின் கட்சி வெற்றிபெறும்: கருத்துக்கணிப்பு

2 mins read
e1c492ab-f6d0-459e-9c78-0bdbb92a7d17
ஜப்பானியப் பிரதமர் தக்காய்ச்சியின் எல்டிபி கட்சி, நாடாளுமன்றக் கீழவையில் அவையில் உள்ள 465 இடங்களில் 233 இடங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சியின் கட்சி, எதிர்வரும் கீழவைத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்று வெற்றி அடையும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

கருத்துக்கணிப்பை அ‌‌‌‌‌‌ஷாகி நாளிதழ் நடத்தியது. அதன் விவரங்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) வெளியிடப்பட்டது.

ஜப்பானியப் பிரதமர் தக்காய்ச்சியின் எல்டிபி கட்சி, நாடாளுமன்றக் கீழவையில் உள்ள 465 இடங்களில் 233 இடங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது.

தற்போது எல்டிபி கட்சி 198 இடங்களை மட்டுமே வைத்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.

பிப்ரவரி 8ஆம் தேதி நடக்கும் கீழவைத் தேர்தல் திருவாட்டி தக்காய்ச்சிக்கு மிக முக்கியமானது. நிதி ரீதியாகப் பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் அவர், வட்டி குறைப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.

பெரிய அளவிலான வெற்றி திருவாட்டி தக்காய்ச்சியின் நிதிக் கொள்கைகளுக்கு ஆதரவைத் தரும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் எல்டிபி கட்சியின் கூட்டணியில் உள்ள இ‌ஷின் கட்சியும் நல்ல வெற்றியைப் பதிவு செய்யும் என்று தரவுகள் காட்டுகின்றன.

இதன்மூலம் எல்டிபி கட்சியும் அதன் கூட்டணிக் கட்சியும் கிட்டத்தட்ட 300 இடங்களை வெல்லும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்படுகிறது.

“பெரிய அளவிலான பெரும்பான்மை தக்காய்ச்சிக்கு வலிமையைக் கொடுக்கும். அதேபோல் பங்குச் சந்தையிலும் முக்கியமான சில நகர்வுகளைக் காணமுடியும்,” என்று கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே எதிர்க்கட்சியான சிஆர்ஏ கட்சி மோசமாகத் தோற்கும் என்று தரவுகள் கூறுகின்றன.

தற்போது சிஆர்ஏ கட்சியிடம் 167 இடங்கள் உள்ளன. எதிர்வரும் தேர்தலில் அது பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் தோற்கும் என்று கூறப்படுகிறது.

ஜப்பானியப் பிரதமர் தக்காய்ச்சி தற்போது சிறிய அளவிலான பெரும்பான்மை ஆதரவை மட்டுமே கீழவையில் வைத்துள்ளார். கொள்கைகளை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வேண்டும். அதனால் அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்