தோக்கியோ: ஜப்பான் ரயில் குழும நிறுவனங்கள், ஜப்பான் முழுவதும் உள்ள ரயில்களில் (புல்லட் ரயில் சேவைகள் உட்பட) வரம்பற்ற பயணத்தை அனுமதிக்கும் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட ஜப்பான் ரயில் பயண அட்டைக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளன.
அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து கட்டணம் ஐந்து முதல் ஆறு விழுக்காடு வரை உயர்த்தப்படும்.
பயண அட்டையின் விலை அதன் செல்லுபடியாகும் காலத்தைப் பொறுத்தது. பெரியவர்களுக்கான ஏழு நாள்பயண அட்டை சாதாரண ரயில் பெட்டிகளில் பயணம் செய்ய 3,000 யென் (S$24) அதிகரித்து 53,000 யென்னாகவும் பிரீமியம் கிரீன் கார் பெட்டிகளுக்கு 4,000 யென் அதிகரித்து 74,000 யென்னாகவும் உயர்த்தப்படும்.
பெரியவர்களுக்கான பயண அட்டைகளுக்கான பிற விலை மாற்றங்களில், சாதாரண ரயில் பெட்டிகளுக்கான 14 நாள் பயண அட்டை 4,000 யென் அதிகரித்து 84,000 யென்னாகவும் அதேபோன்று 21 நாள் பயண அட்டை 5,000 யென் அதிகரித்து 105,000 யென்னாகவும் உயர்த்தப்படுவது அடங்கும்.
ஜே.ஆர் குழும நிறுவனங்கள் இறுதியாக அக்டோபர் 2023ஆம் தேதியன்று தனது ஜப்பான் ரயில் பயண அட்டை விலைகளைத் திருத்தின. அப்போது அவை ஏறத்தாழ 70 சதவீதம் உயர்த்தப்பட்டன. அதன் பிறகு அதன் சில உறுப்பு நிறுவனங்களால் செய்யப்பட்ட கட்டண மாற்றங்களை இந்த அண்மைய திருத்தம் பிரதிபலிக்கிறது என்று நிறுவனங்கள் தெரிவித்தன.

