தோக்கியோ: தோக்கியோ அருகே சாலையில் ஏற்பட்ட ஆழ்குழியில் விழுந்து, பாதாளத்தில் சிக்கிய 74 வயது லாரி ஓட்டுநரைத் தேடி மீட்கும் பணி மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.
சைத்தாமா மாநிலத்தில் அவர் விழுந்த சாலைக் குழியில் கூடுதல் பள்ளம் ஏற்பட்டு ஆபத்தானதாக அது மாறியுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை (ஜனவரி 30) கூறினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) உள்ளூர் நேரம் காலை 9.50 மணியளவில் யாஷியோ நகரின் சாலையில் திடீர் என்று ஏற்பட்ட குழிக்குள் லாரி விழுந்தது. ஐந்து மீட்டர் சுற்றளவிலும் 10 மீட்டர் ஆழத்திலும் அந்தப் பள்ளம் இருந்ததாக த ஜப்பான் டைம்ஸ் ஊடகம் கூறியது.
குழிக்குள் விழுந்த லாரி 1,800 கிலோ எடை கொண்டது. அதனை ஓட்டிய 74 வயது முதியவர் அந்தக் குழிக்குள் சிக்கிக்கொண்டார். அவரை மீட்பதற்கான பணிகள் பாரந்தூக்கி மூலம் உடனடியாகத் தொடங்கின. தீயணைப்பாளர்கள் இரவுபகலாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
ஆனால், அந்த இடத்தின் அருகிலேயே சாலையில் இன்னொரு பள்ளம் ஏற்பட்டத்தை ஜனவரி 29 நள்ளிரவு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.
பின்னர் மீண்டும் தொடங்கிய பணிகள் மறுநாளே இரண்டாம் முறையாக நிறுத்தப்பட்டு உள்ளன.
குளிப்பதைக் குறைக்க வேண்டுகோள்
முன்னதாக, அந்த முதியவரை மீட்பதற்கு உதவியாக, பாதாளக் கழிவுநீர்ப் பாதையில் நீரோட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, அந்த வட்டாரத்தைச் சுற்றியுள்ள 1.2 மில்லியன் மக்களும் குறைவான தண்ணீரைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களைக் குறைத்துக்கொள்ளுமாறு சைத்தாமா மாநில அரசாங்க அதிகாரிகள் அந்த குடியிருப்பாளர்களிடம் கூறினர். அவ்வாறு செய்வது, மீட்பு வட்டாரத்திற்குள் அதிகப்படியான தண்ணீர் புகுவதைத் தடுக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.