தோக்கியோ: அலுவலகக் கூட்டங்களில் பெண்கள் அளவுக்கு அதிகமாக பேசுகின்றனர் என்று கூறி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார் தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர்.
இப்போது மேலும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது ஜப்பானின் ஆளுங்கட்சி.
கட்சிக் கூட்டங்களில் பெண்கள் கலந்துகொள்ளலாம். ஆனால் அவர்கள் வாய்திறக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்க அக்கட்சி உறுப்பினர்கள் தலைமைக்குப் பரிந்துரைத்துள்ளனர்.
ஜப்பானின் ஆளுங்கட்சியான முற்போக்கு ஜனநாயகக் கட்சியினர், முக்கிய கூட்டங்களில் பெண்களின் பங்கு குறித்த புதிய திட்டம் ஒன்றை கட்சித் தலைமைக்கு பரிந்துரைத்துள்ளனர். அதாவது, பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் கட்சியின் முக்கிய கூட்டங்களில் பங்கேற்கலாம், ஆனால், அவர்கள் அக்கூட்டங்களில் வாயைத் திறக்கவே கூடாது என்பதே அந்தப் புதிய திட்டம்.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் தலைமைச் செயலாளர் 82 வயது டோஷிஹிரோ நிக்கை, "கட்சியின் நிர்வாக சபையில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதாக பரவலாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
"இருப்பினும் கட்சிக் கூட்டங்களில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் முறையை பெண்கள் கவனிக்க வேண்டும். அங்கு எந்த மாதிரியான விவாதங்கள் இடம்பெறுகின்றன என்பதை அவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்வது மிக முக்கியம்.
"'கவனிக்க வேண்டும்' என்பது கூட்டத்தில் நடக்கும் விவாதம் எதைப்பற்றியது என்பதைத்தான்," என்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு டோஷிஹிரோ தெரிவித்தார்.

