தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடல்நீரில் கரையும் நெகிழி; ஜப்பானிய வல்லுநர்கள் கண்டுபிடிப்பு

2 mins read
3e6269b6-303d-4c6f-a8b4-779b6d76fc20
கடலில் கரையும் புதுவகை நெகிழியைக் காட்டுகிறார் ஜப்பானின் ரைக்கன் ஆய்வு நிலைய ஆய்வாளர். - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: கடல் நீரில் சில மணி நேரங்களில் கரையும் நெகிழியை ஜப்பானிய அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்மூலம் மாசடைவதிலிருந்து கடல்களையும் தீங்கு நேராமல் வனஉயிர்களையும் காப்பதற்குத் தீர்வுகாண்பது சாத்தியமாகலாம்.

மட்கும் தன்மையுள்ள நெகிழி குறித்து நீண்டகாலமாகவே அறிவியல் வல்லுநர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தாங்கள் உருவாக்கியுள்ள புதுவகை நெகிழி விரைவாக, எந்தத் தடயத்தையும் விட்டுச்செல்லாமல் மட்கிப் போகும் என்று தோக்கியோ பல்கலைக்கழகத்தையும் ‘ரைக்கன்’ அறிவியல் நிலையத்தையும் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தோக்கியோ அருகிலிருக்கும் வாக்கோ நகரிலுள்ள ஓர் ஆய்வகத்தில் அதனை அவர்கள் செய்துகாட்டினர். கடல்நீர் அடங்கிய கொள்கலனில் ஒரு சிறு நெகிழித்துண்டைப் போட்டு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குக் கலக்க, நெகிழித்துண்டு முற்றிலுமாக நீரில் கரைந்துபோனது.

புதுவகை நெகிழியை வணிகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது குறித்து ஆய்வாளர்கள் குழு எதனையும் தெரிவிக்கவில்லை, ஆயினும், பொதியாக்கத் துறை (பேக்கேஜிங்) உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அதில் ஆர்வம் காட்டுவதாக ஆய்வுக்குழுவின் தலைவர் தக்குசோ அய்டா கூறினார்.

அதிகரித்துவரும் நெகிழிக் கழிவுகளால் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் புத்தாக்கத் தீர்வுகளை உருவாக்கும் முனைப்பில் உலகம் முழுவதும் அறிவியலாளர்கள் முனைப்போடு பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே, ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதியை உலகச் சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாடுவதன்மூலம் நெகிழிக் கழிவுகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் 23 மில்லியன் முதல் 37 மில்லியன் டன் வரையிலான நெகிழிக் கழிவுகள் கடலில் கொட்டப்பட்டு வருவதாகக் கூறியுள்ள ஐநா சுற்றுச்சூழல் நிறுவனம், வரும் 2040ஆம் ஆண்டுவாக்கில் நெகிழி மாசுபாடு மும்மடங்காக உயரும் என்றும் கணித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்