தோக்கியோ: மதுபோதையில் மிதிவண்டி ஓட்டியதற்காக ஆசிரியர் ஒருவர் ஜப்பானில் புதன்கிழமை (அக்டோபர் 15) பணிநீக்கம் செய்யப்பட்டார்.
அந்த 36 வயது ஆடவர் சீபா மாநிலம், ஃபூனபாஷி நகரைச் சேர்ந்தவர்.
மது அருந்திவிட்டு மிதிவண்டி ஓட்டியதற்காக ஆசிரியர் ஒருவரைக் கல்வித்துறை பணியைவிட்டு நீக்கியிருப்பது இதுவே முதன்முறை.
சிறப்புத் தேவைப் பள்ளியில் அந்த ஆசிரியர் பணியாற்றி வந்தார்.
கடந்த ஜூன் 28ஆம் தேதியன்று ஃபூனபாஷியில் உள்ள ஒரு ஜப்பானிய வகை மதுக்கூடத்தில் மது அருந்தியபின் அவர் மிதிவண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவர் மது அருந்தியிருந்தாரா எனக் காவல்துறையினர் சோதனை செய்தனர்.
அவரது உடலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக மது இருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து, சாலைப் போக்குவரத்து விதியை மீறிய சந்தேகத்தின்பேரில் அவர் தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டன. ஆயினும், கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் மீதான வழக்கை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கைவிட்டனர்.
கடந்த 2024 நவம்பரில் நடப்பிற்கு வந்த திருத்தியமைக்கப்பட்ட சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்படி, ஜப்பானில் போதையில் மிதிவண்டி ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.