தோக்கியோ: ஸ்பெயினைச் சேர்ந்த 117 வயது மூதாட்டி ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, உலகிலேயே ஆக வயதானவர் என்று 116 வயது ஜப்பானிய மூதாட்டி அறிவிக்கப்பட இருப்பதாக ஆய்வுக் குழு ஒன்று ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று தெரிவித்தது.
திருவாட்டி டொமிக்கோ இட்டூக்கா 1908ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதியன்று பிறந்தார்.
இவர் ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள அஷியா நகரில் வாழ்ந்து வருவதாக அமெரிக்காவை மையமாகக் கொண்ட அந்த ஆய்வுக் குழு தெரிவித்தது.
இதற்கு முன்பு உலகின் ஆக வயதானவர் என்று அறிவிக்கப்பட்ட திருவாட்டி மரியா பிரான்யாஸ் மொரேரா ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று ஸ்பெயினில் உள்ள தாதிமை இல்லத்தில் மரணமடைந்தார்.
மூன்று பேருக்கு அம்மாவான திருவாட்டி இட்டூக்கா, 70 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்டவராக இருந்தபோது அடிக்கடி மலையேறினார்.
மலையேறுவதற்கான காலணிகளைப் பயன்படுத்தாமல் சாதாரண காலணிகளை அவர் பயன்படுத்தி மலையேறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி இட்டூக்கா 100 வயதாக இருந்தபோது கைத்தடி பயன்படுத்தாமல் நீண்ட படிக்கட்டுகளில் ஏறி ஜப்பானின் அஷியா புனிதத் தலத்துக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

