தோக்கியோ: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தப்படி, அமெரிக்காவின் எண்ணெய், எரிவாயு கனிமவளத் திட்டங்களில் 36 பில்லியன் அமெரிக்க டாலர் (S$45 பில்லியன்) முதலீடு செய்ய ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையே மொத்தம் 550 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
அதன் முதற்கட்டமாக தற்போது இந்த $45 பில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
“ஜப்பானுடனான எங்களது மாபெரும் வர்த்தக உடன்பாடு தொடங்கிவிட்டது. இந்தத் திட்டங்கள் பேரளவிலானவை. வரிகள் இல்லாமல் இவற்றை நடைமுறைப்படுத்த முடியாது,” என்று அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 17) சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் கட்டப்படும் இயற்கை எரிவாயு ஆலை மிக முக்கியமான முதலீடாகக் கருதப்படுகிறது.
இந்த ஆலை 9.2 கிகவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் வரலாற்றிலேயே ஆகப் பெரியது என்று அதிபர் டிரம்ப் வர்ணித்துள்ளார்.
இந்த இயற்கை எரியாயு ஆலையில் ஜப்பான் 33 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஆலை முழு ஆற்றலுடன் இயங்கினால், அது ஒன்பது அணுமின் ஆலைகளுக்குச் சமமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

