டோக்கியோ: பல்லாண்டுகளுக்கு ஜப்பானில் நூற்றுக்கணக்கான நீர்நாய்கள் இருந்த நிலையில், அவற்றின் எண்ணிக்கை தற்போது ஒன்றாகக் குறைந்துள்ளது.
ஜப்பானின் மீன் காட்சியகம் ஒன்றில் இருந்த 18 வயதுப் பெண் கடல் நீர்நாயான ‘கிரா’ நவம்பர் மாதம் உயிரிழந்த நிலையில் இந்த எண்ணிக்கை குறைந்தது.
கிரா இறந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, அத்துடன் வளர்க்கப்பட்ட 22 வயதுப் பெண் கடல் நீர்நாய் ‘மே’யைப் பொதுமக்கள் பார்வையிட மீண்டும் அனுமதிக்கப்பட்டது. அன்று மத்திய ஜப்பானின் மியே மாநிலத்திலுள்ள தோபா கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தில் கதவுகள் திறப்பதற்கு முன்பே ஏறத்தாழ 250 பேர் வரிசையில் நின்றனர்.
“கிராவை எனக்கு மிகவும் பிடிக்கும். மேவுக்கு வயதாகிவிட்டாலும் அது நலமுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்,” என்றார் 19 வயது பல்கலைக்கழக மாணவர் யூமே அபிரு. காட்சியகங்களில் வளர்க்கப்படும் கடல் நீர்நாய்களின் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகளாகும்.
கடந்த 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 150,000 முதல் 300,000 வரை இருந்த உலகக் காட்டுக் கடல் நீர்நாய்களின் எண்ணிக்கை, ரோமத்திற்காக அதிகம் வேட்டையாடப்பட்டதால் சரிந்தது. 2000ஆம் ஆண்டில் இது அருகிவரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டது.
கடந்த 1994ஆம் ஆண்டில் ஜப்பானில் அதிகபட்சமாக 122 கடல் நீர்நாய்கள் இருந்தன.
