தோக்கியோ: 2027ஆம் ஆண்டு முதல் பொதுப் போக்குவரத்தில் ஓட்டுநரில்லாப் பேருந்துகளின் பயன்பாட்டைச் சோதிக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பொருளியல், வர்த்தக, தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அப்பேருந்துகளைத் தானியக்கமாக இயக்குவதற்கும் பயணிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் ஏதுவாகப் பிரத்யேகத் தொலைநிலைக் கண்காணிப்புக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தவும் அந்நாடு திட்டமிட்டுள்ளது.
இது தானியக்க வாகனம் ஓட்டும் வகைப்பாட்டு முறையின் ‘நிலை 4’ தகுதிநிலைக்கு இணையானதாகும்; அதாவது குறிப்பிட்ட சில சூழல்களில் அப்பேருந்துகளை இயக்க மனிதர்களின் தலையீடு அவசியமில்லை.
அச்சோதனைத் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பேருந்து நிறுவனங்கள், வர்த்தக வாகனத் தயாரிப்பாளர்கள், தொலைநிலைக் கண்காணிப்புக் கட்டமைப்பைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவை வரும் ஜூலை 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஜப்பானில் இதற்கு முன்பும் ‘நிலை 4’ சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றாலும், அவை சிறிய ரக வாகனங்களில் அல்லது ஓட்டுநரின் முன்னிலையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.
ஓட்டுநரில்லாப் பேருந்துகளைப் பொதுப் பயன்பாட்டிற்கு முழுமையாகக் கொண்டுவர, வாகனத்தை இயக்குவதுடன் பயணிகளுக்கான சேவைகளைத் தானியக்கமாக்குவதும் அவசியமாகும்.
அதற்கேற்ப பேருந்துக் கதவுகளைத் தானியக்கமாகத் திறந்து மூடுதல், பேருந்து சென்று சேருமிட விவரங்களைத் திரையில் காட்சிப்படுத்துதல் போன்ற புதிய கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும்.

