தென்கொரிய அரிசி மீது ஜப்பானியர்கள் நாட்டம்

2 mins read
விண்ணைத் தொடும் ஜப்பானிய அரிசி விலை
2ed084de-a475-40cb-8f00-991bec3d59e2
ஜப்பானில் 200,0000 டன் அளவுக்கு அரிசித் தட்டுப்பாடு இருப்பதால், அந்நாட்டு அரசாங்கம் தனது சேமிப்பிலிருந்து அரிசி எடுத்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பானியர்கள் காலம் காலமாக வெளிநாட்டு அரிசியைத் தவிர்த்து வந்துள்ளனர். ஆனால், தற்பொழுது ஜப்பானிய அரிசி விலை விண்ணைத் தொடும் நிலையில், அந்நாட்டு மக்கள் சென்ற வாரம் தென்கொரியாவிலிருந்து வரும் அரிசியை வாங்குவதில் நாட்டம் காட்டுவதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜப்பானில் இறக்குமதியான தென்கொரிய அரிசி மிகவும் குறைந்த அளவாக இரண்டு டன் என்றபோதிலும் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் மிகப் பெரியது என்று கூறப்படுகிறது. ஜப்பானில் 1993ஆம் ஆண்டு ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாட்டின்போது இருந்த நிலையில் இருந்து தற்போதைய நிலை பெரிய மாற்றம் என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்தக் காலகட்டத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து இறக்குமதியான அரிசி கடைகளில் விற்பனை ஆகாமல் கிடந்ததாக கூறப்படுகிறது.

“ஜப்பானிய அரிசியின் சுவை மிகவும் நன்றாக இருக்கும். அதனால், ஜப்பானியர்கள் மற்ற நாட்டு அரிசி மீது நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால், இப்பொழுது அவர்களுக்கு தென்கொரிய அரிசியும் தரத்தில் சிறந்தது என்று புரிந்துள்ளது,” என்று கூறுகிறார் தென்கொரிய அரிசி நிபுணரான பார்க் ஜே ஹியுன்.

ஜப்பானில் 200,0000 டன் அளவுக்கு அரிசித் தட்டுப்பாடு இருப்பதால், அந்நாட்டு அரசாங்கம் தனது சேமிப்பிலிருந்து அரிசி எடுத்துள்ளது. அப்படிச் செய்தும் கடந்த 2024ஆம் ஆண்டு இருந்த அரிசி விலையைவிட தற்போது விலை இருமடங்காக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலை பல்வேறு வெளிநாட்டு அரிசியின்மீது ஜப்பானியர்களின் பார்வையைத் திருப்பியுள்ளது.

ஜப்பானுக்கு தென்கொரிய அரிசியை ஏற்றுமதி செய்த தென்கொரியாவின் தேசிய வேளாண் கூட்டுறவு சம்மேளனம் தாங்கள் ஜப்பானுக்கு இதற்கு முன் குறைந்தது 35 ஆண்டுகளாக அந்நாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்ததில்லை என்று தெரிவித்துள்ளது

தென்கொரிய அரிசிக்கு மற்ற நாட்டு அரிசியைவிட ஜப்பானில் கூடுதல் வரவேற்பு உள்ளது. அது மற்ற நாடுகளின் அரிசி போல் அல்லாது சிறிய அளவிலான, பசை அதிகம் உள்ள அரிசி வகை. மாறாக வெப்ப மண்டலமான தாய்லாந்தில் அறுவடையாகும் அரிசி நீள வடிவிலான, குறைவான பசையுள்ள அரிசியாக விளங்குவதாகக் கூறப்படுகிறது.

“அதற்கு மணம் குறைவு. அத்துடன், ஜப்பானிய அரிசியைவிட சுவையும் குறைவு,” என்று தாய்லாந்து அரிசி பற்றி விளக்கினார் தோக்கியோவில் உள்ள அரிசி நிபுணரும் விற்பனையாளருமான தக்காஷி கோபாயாஷி. இவர் கொரிய நாட்டு அரிசியே ஜப்பானிய அரிசிக்கு ஈடானது என்றும் சொல்கிறார்.

குறிப்புச் சொற்கள்