ஜப்பானின் இரண்டாம் தலைநகர்: ஒசாக்கா, ஃபுக்குவோக்கா, அய்ச்சி விருப்பம்

ஜப்பானின் இரண்டாம் தலைநகர்: ஒசாக்கா, ஃபுக்குவோக்கா, அய்ச்சி விருப்பம்

2 mins read
3f70446b-4731-4844-badb-dbbefcbc2750
ஒசாக்கா. - படம்: கயாக்
multi-img1 of 3

தோக்கியோ: ஜப்பானின் இரண்டாம் தலைநகராக விளங்க ஒசாக்கா, ஃபுக்குவோக்கா, அய்ச்சி ஆகியவை விருப்பம் தெரிவித்துள்ளதாக அவற்றின் ஆளுநர்கள் கூறியுள்ளனர்.

ஒருவேளை தலைநகர் தோக்கியோ பேரிடருக்கு உள்ளானால் நாட்டின் அடிப்படை நிர்வாக அம்சங்களை மற்ற இடங்களுக்கு மாற்ற வகைசெய்யும் மசோதா கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 24) சட்டமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒசாக்கா, ஃபுக்குவோக்கா, அய்ச்சி ஆகியவை ஜப்பானின் இரண்டாம் தலைநகராக விளங்க விருப்பம் தெரிவித்துள்ளன.

புதிய சட்டத்தின்கீழ் ஒசாக்கா, ஃபுக்குவோக்கா நகரங்கள், அய்ச்சி மாநிலம் ஆகியவற்றைத் தாண்டி மற்ற பகுதிகளும் இதற்கு முன்வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்தில்கொள்ளப்படும் அம்சங்கள்

மக்கள் எண்ணிக்கை, பொருளியல் நடவடிக்கைகள், அரசு நிர்வாக அம்சங்கள் ஆகியவை தோக்கியோவில்தான் அதிகமாக இடம்பெறுகின்றன. அதனால் ஒருவேளை தோக்கியோவின் முக்கிய நகர்ப்பகுதி பேரிடரால் பாதிக்கப்பட்டால் அதேநேரம் அதுபோன்ற பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு குறைவாக இருக்கும் இரண்டாம் தலைநகரைத் தேர்ந்தெடுத்து நிலைமையைச் சீராக்குவது புதிய சட்டத்தின் இலக்காகும்.

அரசாங்க, அரசு அமைப்புகள் ஆகியவற்றின் கிளைகள் இருப்பது, மக்கள்தொகை தொடர்பான அம்சங்கள், உள்ளூர் பொருளியல் எவ்வளவு வலுவாக இருக்கிறது ஆகியவற்றைக் கொண்டு இரண்டாம் தலைநகராக விளங்கக்கூடிய நகரங்கள் அடையாளம் காணப்படும். அதோடு, இரண்டாம் தலைநகராக விளங்குவதற்குத் தேவையான அரசாங்க நிர்வாகக் கட்டமைப்பு அந்நகரங்களில் இருக்கவேண்டும்.

இரண்டாம் தலைநகராகத் தேர்ந்தெடுக்கப்படும் நகரில் அடங்கும் பகுதிகளுக்கு வரி தொடர்பான அனுகூலங்களும் சில விதிமுறைத் தளர்வுகளும் வழங்கப்படும். ஓரிடத்துக்கும் மேலான பகுதிகளுக்கு இரண்டாம் நகரம் என்ற அங்கீகாரம் வழங்கப்படக்கூடும்.

மற்ற பகுதிகளும் விருப்பம்

இதற்கிடையே, ஹொக்கைடோ அரசாங்கமும் இதன் தொடர்பிலான முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த மாநிலத்தின் தலைநகரான சம்போரோ உள்ளாட்சி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மியாகி மாநிலமும் விருப்பம் தெரிவித்துள்ளது. அடிப்படை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய முடிந்தால் விருப்பம் தெரிவித்து உகந்த நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக மியாகி ஆளுநர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்