நியூயார்க்: ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22ஆம் தேதி) முதன்முறையாக உரையாற்றினார்.
அப்போது அவர் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் ஜப்பான் உறுதியாக இருப்பதைத் திருவாட்டி தக்காய்ச்சி சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், நீதிமன்றத்தின் தலைவர் உள்ளிட்டோர் மீது அமெரிக்கா விதித்த தடைகளை அவர் நேரடியாக விமர்சிக்கவில்லை.
அமெரிக்காவின் தடையை மிகவும் வருந்தத்தக்கது என்று முதலில் குறிப்பிட்ட தக்காய்ச்சி, பின்னர் அது ஜப்பானின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணானது என்று கூறினார்.
தமது நாட்டை அமைதியை விரும்பும் நாடு என்று விவரித்த பிரதமர் தக்காய்ச்சி, அது தற்காப்பு சார்ந்த கொள்கையை மட்டுமே கடைப்பிடிப்பதாகக் கூறினார்.
ஜப்பானின் தற்காப்புத் திட்டங்கள் புதிய ராணுவ வாதத்தைப் பிரதிபலிப்பதாகச் சீனா முன்வைத்த விமர்சனங்களை அவர் நிராகரித்தார்.
பனிப்போருக்குப் பிந்தைய நிலையான காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டதாகக் கூறிய திருவாட்டி தக்காய்ச்சி, உலகிற்கு அமைதியையும் நிலைத்தன்மையையும் கொண்டு வருவதில் ஐநாவின் பங்கு முன்பைவிட தற்போது மிகவும் முக்கியமானது என்றார்.
உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
வடகொரியாவின் அணுவாயுதம், ஏவுகணைத் திட்டங்களை அமைதிக்கான பெரும் அச்சுறுத்தல் என்று சாடிய தக்காய்ச்சி, அந்த நாட்டை அணுவாயுதமற்ற நாடாக மாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
மேலும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர், ஹோர்முஸ் நீரிணை தொடர்பிலும் அவர் அக்கறை தெரிவித்தார்.
