சோல்: அண்மையில் நேர்ந்த ‘ஜேஜு’ விமான விபத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, தென்கொரியாவின் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டு நாடாளுமன்றப் பணிக்குழுவை அமைக்க செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) ஒப்புக்கொண்டுள்ளன.
அந்த விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர்.
அந்த போயிங் 737-800 ரக விமானம் சென்ற ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி, 181 பயணிகளையும் விமான ஊழியர்களையும் ஏற்றிக்கொண்டு தாய்லாந்திலிருந்து தென்கொரியாவின் முவானுக்குச் சென்றுகொண்டிருந்தது.
தரையிறங்கியபோது, தென்கொரிய விமான நிலையத்தில் உள்ள கான்கிரீட் சுவரை மோதி விமானம் தீப்பற்றிக்கொண்டது.
விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், கூட்டுப் பணிக்குழுவுக்கான ஒருமித்த முடிவு தென்கொரியாவில் பல வாரங்களாக ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்புக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது.
பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அதிபர் யூன் சுக் யோல் சென்ற மாதம் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதை அடுத்து, அங்குக் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
“எங்களது மக்கள் சக்திக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் சிறப்புக் குழு ஒன்றை நிறுவ முடிவுசெய்துள்ளன,” என்று ஆளும் மக்கள் சக்திக் கட்சி ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டது.
விபத்துக்கான காரணங்கள் குறித்த விசாரணை பற்றி கலந்தாலோசிக்கப்படும் என்றும் மாண்டோரின் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
ஆளுங்கட்சியிலிருந்து ஏழு பேர், எதிர்க்கட்சியிலிருந்து ஏழு பேர், எந்தவொரு கட்சியையும் சேராத ஒருவர் என 15 பேர் பணிக்குழுவில் இடம்பெறுவர் என்று மக்கள் சக்திக் கட்சி தெரிவித்தது.
இந்நிலையில், விமான விபத்துக்குப் பொறுப்பேற்க பதவி விலகத் திட்டமிடுவதாக தென்கொரியப் போக்குவரத்து அமைச்சர் பார்க் சாங் வூ கூறியுள்ளார்.
“இந்தப் பேரிடருக்கு எனக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளதாக நான் உணர்கிறேன்,” என்று திரு பார்க் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் சொன்னார்.
தற்போதைய நிலைமையைக் கையாண்டபின், பதவி விலக சரியான நேரத்தைத் தேர்ந்தெடுக்கப்போவதாக அவர் கூறினார்.